2.5 மில்லியன் அமெரிக்க டாலர் ஹேக்கர்: நிதிச் செயலாளர் மத்திய வங்கி ஆளுநர் விசாரணைக்கு அழைப்பு

2.5 மில்லியன் அமெரிக்க டாலர் ஹேக்கர்

2.5 மில்லியன் அமெரிக்க டாலர் ஹேக்கர்: நிதிச் செயலாளர் மத்திய வங்கி ஆளுநர் விசாரணைக்கு அழைப்பு

இலங்கைத் திறைசேரியிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்தப்பட வேண்டிய 22.9 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் தவணையின் ஒரு பகுதியாக, 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் இணைய ஊடுருவல் (ஹேக்கர்) ஒருவரின் கணக்குக்குத் திருப்பிவிடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்பவம் தொடர்பபாக நிதி அமைச்சின் செயலாளர் டாக்டர். ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் மத்திய வங்கி ஆளுநர் டாக்டர். பி. நந்தலால் வீரசிங்க ஆகியோர் வரும் ஏப்ரல் 30 திகதி  அரசாங்க நிதி தொடர்பான குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர். ஹர்ஷ டி சில்வா, தனது எக்ஸ் (X) கணக்கில் பதிவிட்டுள்ளதாவது:

"நிதி அமைச்சின் செயலாளரையும் மத்திய வங்கி ஆளுநரையும் இவ்வாறு குறுக்கு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என நான் எடுத்த வலுவான நிலைப்பாட்டுக்கு குழு உறுப்பினர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட வரும் ஏப்ரல் 30 (வியாழக்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அரசாங்க நிதி தொடர்பான குழு கூடவுள்ளதாகவும் டாக்டர். டி சில்வா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில், மேற்படி பணத்தை மீளப்பெறுவதற்கும், இனி இத்தகைய சம்பவங்கள் நிகழ்வதைத் தடுப்பதற்குமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.