கோறளைப்பற்று பிரதேச சபை எல்லை நிர்ணய ‘ஸ்டிக்கர்’ நடவடிக்கைக்கு எதிர்ப்பு – நிர்மலன்

கோறளைப்பற்று பிரதேச சபை எல்லை நிர்ணய ‘ஸ்டிக்கர்’ நடவடிக்கைக்கு எதிர்ப்பு – நிர்மலன்

வாழைச்சேனை கோறளைப்பற்று  பிரதேச சபையின் வட்டார எல்லைகளை அடையாளப்படுத்தும் வகையில், வட்டாரங்களின் பெயர் பொறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டும் நடவடிக்கையை சபை நிர்வாகம் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதனை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தனபாலசின் நிர்மலன் தெரிவித்துள்ளார்.

இன்று (02) கறுவாக்கேணியில் அமைந்துள்ள தனது அரசியல் பணிமனையில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இக்கருத்துகளை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

கோறளைப்பற்று பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், சபையின் அனைத்து வட்டாரங்களையும் மையப்படுத்தி எல்லைப் பகுதிகளில் வட்டாரப் பெயர் பொறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டுவது தொடர்பாக கடந்த சபை அமர்வில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதில் நிர்வாக ரீதியான சிக்கல்கள் காணப்படுகின்றன.

மேலும், பிரதேசத்தின் சில வட்டாரங்களுக்கு இந்நடவடிக்கை பொருத்தமற்றதாக இருக்கும். குறித்த விடயத்திற்கு சபை அமர்வில் தாம் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஆளும் தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்நடவடிக்கை தமிழரசு கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுடன் இணைந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதேபோன்று வாகரை பிரதேசத்தில் காரமுனை கிராமத்தைச் சார்ந்த போலி ஆதாரங்களை முன்வைத்து குழப்பநிலையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

இவ்வாறான செயற்பாடுகளை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், பிரதேச மக்கள் இவ்விடயத்தில் விழிப்புடன் இருந்து செயற்பட வேண்டும் என்றும் தனபாலன் நிர்மலன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.