நிலக்கரி மோசடியே மின்கட்டண உயர்வுக்குக் காரணம்- சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

நிலக்கரி மோசடியே மின்கட்டண உயர்வுக்குக் காரணம்

நிலக்கரி மோசடியே மின்கட்டண உயர்வுக்குக் காரணம்- சம்பிக்க ரணவக்க  குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பகைத்துக்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதைய அரசாங்கம் எடுக்காது எனவும், அதனால் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்யாது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (ஏப்ரல் 1) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.வரவிருக்கும் புத்தாண்டு நாட்டு மக்களுக்கு சுபமானதாக அமையாது என்றும் எச்சரித்த அவர், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதலை காரணமாகக் காட்டி எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதாகவும், அதனைத் தொடர்ந்து தற்போது மின்கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற மோசடி மற்றும் தரமற்ற நிலக்கரி கொள்வனவினாலேயே மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ரணவக்க குற்றம்சாட்டினார். எதிர்காலத்தில் மீண்டும் மின்கட்டணம் உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்தார்.

நீர் மின் உற்பத்தியை குறைத்துவிட்டு, எரிபொருள் மற்றும் நிலக்கரி ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காகவே அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கான விலைமனு கோரல்கள் அரசாங்கத்துக்கு இணக்கமான தரப்பினருக்கே வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இது முற்றிலும் தவறான நடவடிக்கை என்று கண்டனம் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "எதிர்காலத்தில் வலுசக்தி துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும்" என்று எச்சரித்தார். எரிபொருள் மற்றும் மின்சார கட்டண உயர்வுகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் பாதிக்கும் எனவும், இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இத்தகைய கொள்கை முடிவுகளை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தையும் ரணவக்க சுட்டிக்காட்டினார்.