மின்சார ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்
மின்சார ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்
தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. புதிதாக அமைக்கப்பட்ட நான்கு மின்சார நிறுவனங்களின் பிரதான நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் தலைவர்களுடன் இன்று (10) நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மின்சார தொழில்நுட்ப பொறியியலாளர் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார, பேச்சுவார்த்தை குறித்து விளக்குகையில்,
"மின்சார சபை கலைக்கப்பட்டு புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதை அடுத்து, அந்த நிறுவனங்களின் நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடுவது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்தோம்.
இன்றைய பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இருப்பினும், எங்களது 6 முக்கிய கோரிக்கைகள் தொடர்பில் தம்மால் உடனடியாக பதிலளிக்க முடியாது என்றும், இது குறித்து ஜனாதிபதி அல்லது பொறுப்பான அமைச்சரே தீர்மானிக்க வேண்டும் என்றும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்றைய பேச்சுவார்த்தையில் சாதகமான தீர்வு ஏற்பட்டிருந்தால் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பரிசீலித்திருப்போம். ஆனால் அது சாத்தியமாகவில்லை. அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் எங்கள் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால், போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்" என்றார்.
இதேவேளை, மின்சார ஊழியர்களின் இந்த தொடர் வேலைநிறுத்தம் காரணமாக பல பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.