போதுமான மருந்தாளர்கள் இல்லை – கிளிநொச்சி வைத்தியசாலையில் நோயாளிகள் பலமணி நேர காத்திருப்பு

கிளிநொச்சி வைத்தியசாலையில் மருந்தாளர் பற்றாக்குறை

போதுமான மருந்தாளர்கள் இல்லை – கிளிநொச்சி வைத்தியசாலையில் நோயாளிகள் பலமணி நேர காத்திருப்பு

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் மருந்தாளர்களின் கடும் பற்றாக்குறை நோயாளிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. சிகிச்சைக்கு வருவோர் மணிக்கணக்கில் காத்திருக்க நேரிடுவதோடு, மருந்துகளைப் பெறுவதும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த வைத்தியசாலையில் கிளிநொச்சி மக்கள் மட்டுமன்றி, முல்லைத்தீவு மாவட்ட மக்களும் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற வரும் நிலையில், போதுமான மருந்தாளர்கள் இல்லாதது கவலைக்குரியதாக உள்ளது.

இது குறித்து அதிகாரிகளுக்குப் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. வைத்தியரைச் சந்தித்து முடித்துவிட்டு, மருந்தகத்தில் மீண்டும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தனியார் மருந்தகங்களில் மருந்து வாங்கும் ஆற்றல் இல்லாத ஏழை மக்கள் முற்றிலும் அரச வைத்தியசாலையையே நம்பியுள்ளனர். எனவே, மருந்தாளர் பற்றாக்குறையை உடனடியாகத் தீர்க்க சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.