மத்திய கிழக்குப் போர் நிறுத்தத்தை வாய்ப்பாக்கி எரிபொருள் விலையைக் குறைக்க அரசு முன்வர வேண்டும் – சஜித்
போர் நிறுத்தத்தை வாய்ப்பாக்கி எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும்
மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள இரண்டு வார கால போர் நிறுத்த இடைவெளியைப் பயன்படுத்தி, நாட்டின் அத்தியாவசிய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், தற்போதைய சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி எரிபொருள், எரிவாயு, விவசாய உரங்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் இறக்குமதியை முறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் அவற்றின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் முன்வர வேண்டும்.
முன்னதாக மத்திய கிழக்கு பதற்றத்தைக் காரணம் காட்டியே எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனால், தற்போது உலக சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், அதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும். எனவே, இன்று நள்ளிரவோ அல்லது நாளைய தினமோ எரிபொருள் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உர விநியோகம் தொடர்பாக ஜனாதிபதி சபையில் முன்வைக்கும் கருத்துகளுக்கும், கள யதார்த்தத்திற்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. விவசாயிகள் இன்றும் உரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு வெறும் வார்த்தைகளால் இன்றி, செயலில் தீர்வை காட்ட வேண்டும்.
பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தற்போதைய உலகளாவிய சூழலைப் பயன்படுத்தி முறையான நிவாரணங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
Editor