மோடி– அநுர இடையே ஆற்றல் ஒத்துழைப்பு குறித்து முக்கிய தொலைபேசி உரையாடல்

மோடி– அநுர இடையே தொலைபேசி உரையாடல்

மோடி– அநுர இடையே ஆற்றல் ஒத்துழைப்பு குறித்து முக்கிய தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி  மற்றும் இலங்கை ஜனாதிபதி  அநுர குமார திசாநாயக  மேற்காசியப் போர்நிலை, உலகளாவிய வழங்கல் சங்கிலி பாதிப்புகள் மற்றும் இருநாட்டு ஆற்றல் ஒத்துழைப்பை மையமாகக் கொண்டு தொலைபேசி மூலம் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.

மார்ச் 24 அன்று நடைபெற்ற இந்த உரையாடலில், மேற்காசியப் பகுதியில் தீவிரமடைந்து வரும் நிலைமைகள் உலகளாவிய ஆற்றல் பாதுகாப்புக்கும் வழங்கல் சங்கிலிக்கும் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து இரு தலைவர்களும் கவனம் செலுத்தினர். அதேவேளை, இந்தியா–இலங்கை இடையிலான ஆற்றல் துறையில் நடைபெற்று வரும் முக்கிய முயற்சிகளின் முன்னேற்றமும் பரிசீலிக்கப்பட்டது.

இருநாடுகளும் நெருங்கிய கூட்டாளிகளாக உள்ள நிலையில், பரஸ்பர சவால்களை எதிர்கொள்ள இணைந்து செயல்படுவோம் என்ற உறுதியையும் தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

ஆற்றல் நெருக்கடியை எதிர்கொள்ள நடவடிக்கைகள்

மேற்காசிய மோதல்களின் பின்னணியில் இலங்கையில் உருவாகும் ஆற்றல் நெருக்கடியை சமாளிக்க அரசு பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு, வாகனங்களுக்கு வாராந்திர எரிபொருள் ஒதுக்கீடு மற்றும் உச்ச நேரங்களில் மின்சார பயன்பாட்டை குறைக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் அரசுத் துறை ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா–இலங்கை ஆற்றல் ஒத்துழைப்பு

இந்நிலையில், திருகோணமலை எண்ணெய் களஞ்சியம் திட்டம் உள்ளிட்ட இந்திய ஆதரவு திட்டங்கள் எதிர்கால ஆற்றல் பாதுகாப்பிற்கான நீடித்த தீர்வாக பார்க்கப்படுகின்றன. கடந்த ஆண்டு இந்திய பிரதமர் இலங்கை வருகையின் போது கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் ஆற்றல் துறை முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்காசியப் போரின் தாக்கம் தீவிரமடையும் நிலையில், இலங்கை உட்பட தெற்காசிய நாடுகள் இந்தியாவிடம் கூடுதல் ஆற்றல் ஆதரவையும் கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.