பிராந்திய நலன் மாத்திரமே இந்தியாவின் நோக்கம்

பிராந்திய நலனே இந்தியாவின் நோக்கம்

பிராந்திய  நலன் மாத்திரமே இந்தியாவின் நோக்கம்

* துணை ஜனாதிபதி, ஈழத் தமிழர் விவகாரம் பற்றி பேச வாய்ப்பில்லை. ஒப்பாசார சந்திப்புக்கு ஏற்பாடு

* இலங்கையை நண்பன் ஆக்கும் திட்டம் மாத்திரமே... தேவையான பொருளாதார உதவிகளுக்கும் ஏற்பாடு...

* தற்போதைய உலக பதற்றத்தில், இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்கும் டில்லி...

அமெரிக்க - ஈரான் போரினால், சர்வதேச விவகாரங்கள் குறிப்பாக, இந்தோ - பசுபிக் பிராந்தியம் என்று வரும் போது, இந்தியாவின் முழுக் கவனமும் 'பிராந்திய பாதுகாப்பு' - 'மூலோபாயம்' என்ற நலன்கள் மீதே அதிகம் திரும்பியுள்ளன. 

பொருளாதாரம் - எரிசக்தித் திட்டங்கள் போன்றவற்றில், இலங்கையின் முதன்மைப் பங்காளியாக, இந்தியாவை நிலை நிறுத்துவதன் ஊடாக சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துதல் என்பது, புதுடில்லியின் முதன்மை உத்தியாகவுள்ளது. 

இப் பின்புலத்தில் தான், இந்திய துணை ஜனாதிபதி இராதாகிருஷ்ணன், கொழும்புக்கு வருகை தந்ததை அவதானிக்க வேண்டும். 

இப் பின்னணியில், வடக்கு- கிழக்கு உட்பட இலங்கைத் தீவின் உள்நாட்டு அரசியல் சூழலில், ஒரு மிகப்பெரிய மாற்றத்தை (System Change) ஏற்படுத்த இந்தியா எவ்வளவு தூரம் துணியும் என்பது கேள்விக்குறியே. 

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்காக இலங்கை அரசுடன் இணக்கமாகப் போக வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருப்பதால், ஈழத்தமிழர் விவகாரத்தில் ஒரு 'மென்மையான போக்கையே' (Soft approach) இந்தியா கையாண்டு வருகிறது. 

குறிப்பாக ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பை நண்பனாக வைத்திருக்க வேண்டும் என்ற ஒற்றைச் சிந்தனை மாத்திரமே, தற்போதைக்கு இந்தியாவின் மூலோபாயத்தில் உண்டு.  

2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சூழலில் இலங்கைக்கு, இந்தியா கொடுத்த பல அழுத்தங்கள் முழுமையான பலனைத் தரவில்லை. 

13 ஆவது திருத்தச் சட்டம் அதிகாரமற்ற நிலையில் இருப்பதும், மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படாமல் இருப்பதும், நில ஆக்கிரமிப்புகள் தொடர்வதும் இங்கே வழமையாகிவிட்டன.

ஆகவே, இலங்கையின் உள்ளக விவகாரங்களில், இந்தியாவின் இராஜதந்திர நகர்வு எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது கேள்வியே..

ஆனால், பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்ய, இந்தியாவின் உதவி இலங்கைக்கு அவசியம் தேவை.

ஆகவே, இந்த இடத்தில் "பேரம் பேசும் சக்தியை" (Bargaining Power) பயன்படுத்தி, 13 ஐ அமுல்படுத்தவும், (Implement) மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவும், இந்தியா அழுத்தம் கொடுக்க முடியும்.

ஆனால், அதற்கான முழு மனதோடு, புதுடில்லி இல்லை.

தமிழர் விவகாரத்தில் முழு மனதுடன் டில்லி ஒருபோதும் செயற்பட்டதே இல்லை... 

தற்போதைய பதற்றமான (Anxiety) உலக அரசியல் சூழலில், எந்த வழியிலேனும் இலங்கையை தனது கைக்குள் வைத்திருப்பதே டில்லியின் நோக்கம்.. 

அநுரகுமார தலைமையிலான அரசாங்கம், 'தேசிய பாதுகாப்பு' - 'இலங்கை ஒற்றையாட்சி' என்பதில் உறுதியாக உள்ளது. 

ஈழத் தமிழர்களுக்கான ”அரசியல் தீர்வு” என்பதில், சிங்கள மக்களின் விருப்பத்திற்கு மாறாகச் “செயற்பட, அநுர மாத்திரம் அல்ல, சிங்கள அரசியல் தலைவர்கள் எவருக்கும் விருப்பம் இல்லை என்பதை புதுடில்லி நன்கு அறியும். 

அதாவது, சிங்கள தலைவர்கள் கட்சி அரசியலுக்கு அப்பால், ஒரு புள்ளியில் நின்று, தமிழர்களுக்கான அரசியல் தீர்வை புறம் தள்ளுகிறார்கள் என்பதை இந்தியா கவனத்தில் எடுகிறது.  

அதேநேரம், தமிழ்த்தேசியக் கட்சிகள் தமக்குரிய, அரசியல் தீர்வில், சிங்களத் தலைவர்கள் போன்று, கட்சி அரசியலுக்கு அப்பால் ஒரு புள்ளியில் நின்று தமது நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக முன்வைக்க தயங்குகிறார்கள் என்பதும் இந்தியாவுக்குத் தெரியும்...  

இப் பின்புலத்தில், இந்தோ - பசுபிக் பிராந்திய பாதுகாப்பு கருதி, ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பை மாத்திரம் பலப்படுத்த, டில்லி அவசியமான அனைத்துக் காரியங்களையும் செய்யும் என்பது உறுதி... 

குறிப்பாக, இந்தியாவின் 'அயல் நாட்டுக்கு முன்னுரிமை' (Neighbourhood First) என்ற கொள்கை மற்றும் 'சாகர்' (Security and Growth for All in the Region -SAGAR) எனப்படும் தொலைநோக்கு அடிப்படையில், இலங்கையுடன் கலாச்சார - வரலாற்று உறவுகளை வலுப்படுத்துதல் முன்னிலை பெறும்... 

இந்திய - இலங்கை ”இரட்டையர் நாகரிகம்” என்பதன் ஊடாக பௌத்த கலாச்சார உறவை மேம்படுத்தும் திட்டங்கள் 2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

ஆகவே, தமிழ்ப் பிரதிநிதிகள், இனிமேலாவது சுயமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். 

இல்லையேல், அமெரிக்க - இந்திய அரசுகள் தமது தேவைக்கு ஏற்ப அவ்வப்போது கையாளப்படும் சக்தியாக மாத்திரமே இருக்க முடியும்...

ஆகவே, இந்திய துணை ஜனாதிபதியின் வருகையால், மாகாண சபைத் தேர்தல் நடக்கும், 13 நடைமுறைக்கு வரும் என்றெல்லாம் கானவு காண வேண்டாம். 

தமிழ்த் தேசியக் கட்சிகளுடனா சந்திப்பும் கூட வெறும் ஒப்பாசாரத்துக்கு மாத்திரமே...

அ.நிக்ஸன்-பத்திரிகையாளர்