ஈரான் தாக்குதல்கள் தீவிரம்: கூட்டாளிகள் பக்கவாட்டில்
ஈரான் தாக்குதல்கள் தீவிரம்:
ஈரான் மற்றும் இஸ்ரேல்–அமெரிக்க கூட்டணிக்கிடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையில், ஈரான் தனித்து நின்று தாக்குதல்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக உலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் நீண்டகால கூட்டாளிகளாகக் கருதப்படும் ரஷ்யாவும் சீனாவும் இதுவரை வார்த்தை ஆதரவையே வழங்கி வருகின்றன. ஆனால் இராணுவ உதவி அல்லது நேரடி தலையீடு போன்ற நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
அயதுல்லா அலி கமேனியின் மரணத்துக்குப் பிறகு, ஈரான் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவும் சீனாவும் தற்போதைய சூழ்நிலையில் ஓரங்கட்டப்பட்ட நிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ரஷ்யா தற்போது உக்ரைன் போரில் சிக்கியுள்ளதால், ஈரானுக்கு நேரடி மற்றும் ஆழமான இராணுவ உதவி வழங்குவது அதிக ஆபத்தானதாக கருதப்படுகின்றது. அதேவேளை சீனா, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது எண்ணெய் வழங்கல் மற்றும் முதலீடுகளை பாதுகாக்க விரும்பினாலும், அமெரிக்காவுடன் நேரடி மோதலை தவிர்க்கும் நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் ஈரான் தனது தாக்குதல்களை வளைகுடா பிராந்தியத்திற்கு அப்பாலும் விரிவுபடுத்தி, எரிசக்தி தொடர்பான இலக்குகளை தாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதே நேரத்தில் ரஷ்யா மற்றும் சீனா இரு தரப்பினருக்கிடையே மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடக்கூடும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள இந்த பதற்றமான சூழ்நிலை உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் புதிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Editor