டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் நீரிணையை உடனடியாக திறக்க வேண்டும் பொருட்படுத்தாத ஈரான்
ஹார்முஸ் நீரிணையை உடனடியாக திறக்க வேண்டும் பொருட்படுத்தாத ஈரான்
உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை உடனடியாக மீண்டும் திறக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில், ஈரான் கேலி செய்யும் வகையில் பதிலடி கொடுத்துள்ளது. நீரிணையைத் திறப்பதற்கான ‘சாவிகள் காணாமல் போய்விட்டதாக’ ஈரான் தூதரகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வளைகுடாப் பகுதியில் ஆரம்பமான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானும் பதில்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில், கடந்த வாரம் ஹார்முஸ் நீரிணையை உடனடியாக திறக்காவிட்டால் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் முதலில் எச்சரித்திருந்தார். பின்னர் நேற்று (ஏப்ரல் 5) மீண்டும் மிரட்டல் விடுத்தார். இரண்டு நாட்களில் ஒப்பந்தம் செய்துகொண்டு நீரிணையை திறக்க வேண்டும், இல்லையெனில் ஈரான் மீது ‘முழுமையான நரகம் இறக்கப்படும்’ என அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு ஈரான் நக்கலாக பதிலடி கொடுத்துள்ளது. ஜிம்பாப்வேயில் உள்ள ஈரான் தூதரகம், “சாவிகள் காணாமல் போய்விட்டன” என கிண்டலாகப் பதிவிட்டது. அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகம், “ஷ்ஷ்... சாவி பூந்தொட்டி அடியில் இருக்கிறது. நண்பர்களுக்கு மட்டும் திறக்கலாம்” என்று பதிவிட்டுள்ளது. இந்தப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பின்னணி:
உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் நீரிணை வழியாகவே செல்கிறது. மோதல் ஆரம்பமானதிலிருந்து இந்த நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், டேங்கர் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. தற்போது இந்தியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்களை மட்டுமே ஈரான் அனுமதித்து வருகிறது. மற்ற கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், வளைகுடாவில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இது உலகப் போராக மாறுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.