மஹிந்த மீது கைவைத்தால் அழிவுதான் ஏற்படும்– மனோஜ் கமகே
மஹிந்த மீது கைவைத்தால் அழிவுதான் ஏற்படும்
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று(12) (செவ்வாய்க்கிழமை) சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்தது.
விசாரணையின் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியபோது, அங்கு திரண்டிருந்த மொட்டுக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் அவரது ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே உரையாற்றினார்.
அப்போது அவர், “மஹிந்த ராஜபக்ஷ திறைசேரியைக் கொள்ளையடிக்கவில்லை; மாறாக மக்களின் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்” என்று தெரிவித்தார்.
மேலும், விசாரணைக்காக தேர்வு செய்யப்பட்ட காலத்தை கடுமையாக விமர்சித்த அவர், “மே மாதம் என்பது வேலுப்பிள்ளை பிரபாகரன்வின் கதையை முடித்த மாதமாகும். அதனால்தான் இந்த மாதத்தை அரசு குறிவைத்துள்ளது. பிரபாகரனின் ஆத்மா சாந்தியடையவே ஆளுந்தரப்பு இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது” என்றும் கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷவை “சிங்கம்” என வர்ணித்த அவர், “அவர் ஒருபோதும் குகைக்குள் ஓடி ஒளியமாட்டார். சட்டத்திற்கு மதிப்பளித்து நேரடியாக வந்து வாக்குமூலம் வழங்கிச் சென்றுள்ளார்” என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளை, திறைசேரி பிணைமுறி மோசடி மற்றும் நிலக்கரி மோசடி தொடர்புடையவர்களையும் இதேபோன்று அழைத்து வந்து விசாரிக்க அரசுக்கு துணிவிருக்கிறதா எனவும் அவர் சவால் விடுத்தார்.
இறுதியாக, “மஹிந்த ராஜபக்ஷ என்பது இந்நாட்டு அரசியல் கலாசாரம். அவர் மீது கைவைத்தால் அழிவுதான் ஏற்படும்” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்
Editor