மத்திய கிழக்கு நெருக்கடி யூரியா உரத்தின் விலையை உயர்த்துகிறது
யூரியா உரத்தின் விலையை உயர்த்துகிறது
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக உலக சந்தையில் யூரியா உரத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் ஒரு டன் யூரியா உரத்தின் விலை 660 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது 89 சதவீத அதிகரிப்பாகும். குறிப்பாக நியூ ஆர்லியன்ஸ் சந்தையில் கிரானுலர் யூரியாவின் விலை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத அளவில் உச்சத்தை எட்டியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் உக்ரைன்-ரஷ்யா போர் வெடித்தபோது உர விலைகள் சாதனை அளவில் உயர்ந்தன. அந்த ஆண்டு செப்டம்பரில் யூரியாவின் விலை ஒரு டன்னுக்கு 910 டாலராக உயர்ந்தது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் விலை ஓரளவு குறைந்து நிலையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியான கப்பல் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டதால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இருந்து உர ஏற்றுமதிகள் குறைந்துள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், முக்கிய உர ஏற்றுமதியாளரான சீனாவும் உர ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலைமை காரணமாக உலக உணவு உற்பத்திச் செலவு உயரக்கூடும் என்றும், 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உணவுப் பணவீக்க நிலை மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறித்து பொருளாதார ஆய்வாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.