கையெழுத்துக் குறிப்புகளால் ஈரானை இயக்கும் மொஜ்தபா கமேனி
ஈரானை இயக்கும் மொஜ்தபா கமேனி"
அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் தனது தந்தை அயத்தொல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பின்னர் பொறுப்பேற்ற மொஜ்தபா கமேனி, பொதுமக்கள் முன் தோன்றாமலும், தனது குரலின் பதிவுகளை வெளியிடாமலும் இருந்து வருகிறார் என.நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கண்காணிப்பை ஏய்க்கும் வகையில், மொஜ்தபா கமேனி ஒரு பழமையான ஆனால் பாதுகாப்பான தொடர்பு முறையைப் பின்பற்றுகிறார். அவருக்கான செய்திகள் கையெழுத்தில் எழுதப்பட்டு, உறைகளில் சீல் செய்யப்பட்டு, நம்பகமான தூதர்கள் மூலம் 'மனித சங்கிலி'யாக கடத்தப்படுகின்றன. இந்த தூதர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புற சாலைகள் வழியாக அவரது பதுங்கு இடத்தை அடைகின்றனர். அவரது பதில்களும் இதே பாதுகாப்பான வழியில் அனுப்பப்படுகின்றன.
தாக்குதலில் மொஜ்தபா கமேனி பலத்த காயமடைந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. அவரது முகம் சேதமடைந்துள்ளது, பிளாஸ்டிக் சர்ஜரி தேவைப்பட்டுள்ளது. ஒரு காலில் மூன்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன, செயற்கை கால் பொருத்தப்பட உள்ளது. காயமடைந்த கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. மேலும், முகம் மற்றும் உதடுகளில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக பேசுவதில் சிரமம் உள்ளது. ஈரானின் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியான் (பயிற்சி பெற்ற இதய அறுவை மருத்துவர்) மற்றும் நாட்டின் சுகாதார அமைச்சர் நேரடியாக அவரது சிகிச்சையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அறிக்கை குறித்து, மொஜ்தபா கமேனியின் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) கணக்கில் வெளியிடப்பட்ட பதிவில், "எதிரியின் ஊடக நடவடிக்கைகள்" தேசிய ஒற்றுமையையும் பாதுகாப்பையும் குலைப்பதற்காகவே என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலையற்ற போர் நிறுத்தம் நிலவுகிறது. ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. பாகிஸ்தானில் நடைபெற இருந்த இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள ஈரான் மறுத்துவிட்டது.
Editor