ஜே.வி.பி. உறுப்பினர்கள் கொண்டுள்ள சொத்துக்களுக்குப் புதிய வரைவிலக்கணம் - நாமல் ராஜபக்ஷ
ஜே.வி.பி. உறுப்பினர்கள் கொண்டுள்ள சொத்துக்களுக்குப் புதிய வரைவிலக்கணம் -
"அரசாங்கத் தரப்பினர் மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் கொண்டுள்ள சொத்துக்களுக்குப் புதிய வரைவிலக்கணம் கொடுத்து நியாயப்படுத்தும் போக்கு காணப்படுகின்றது. அதேவேளை, அரச ஊழியர்களோ அல்லது எதிர்க்கட்சி அரசியல்வாதிகளோ சொத்துக்களைக் கொண்டிருந்தால் அவை உடனடியாகத் திருட்டுச் சொத்துக்கள் என முத்திரை குத்தப்படுகின்றன. இது ஒரு தெளிவான இரட்டை நிலைப்பாடாகும். என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தற்போதைய அரசியல் போக்குகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சுமைகள் குறித்து அவர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் எனக்கு எதிராகப் பரப்பப்பட்ட உகாண்டாவிற்கு 18 பில்லியன் டொலர் கொண்டு சென்றமை, தங்கக் குதிரைகள் மற்றும் லம்போகினி கார்கள் தொடர்பான கதைகள் அனைத்தும் வெறும் பொய்க் குற்றச்சாட்டுகள் என்பது இப்போது நிரூபணமாகி வருகின்றது. எனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகளை, எனது பெயரையும் கௌரவத்தையும் தூய்மைப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே நான் கருதுகின்றேன்.
மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், அரசாங்கம் முறையான நிவாரணங்களை வழங்கத் தவறிவிட்டது. கொரோனா போன்ற பாரிய உலகளாவிய நெருக்கடி நிலவிய காலத்தில்கூட எமது அரசாங்கம் மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா நிவாரணத்தை வழங்கியதை இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.
தற்போதைய ஜனாதிபதியும் அமைச்சர்களும் கடந்த காலங்களில் முக்கிய பதவிகளில் இருந்தபோது மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். எத்தகைய தேர்தல்கள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தமது கட்சி தயாராக உள்ளதுடன், மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி எமது அரசியல் பயணம் தொடரும்" - என்றும் நாமல் ராஜபக்ஷ உறுதிபடத் தெரிவித்தார்.
...........................
Editor