சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் போப் லியோ -
சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் போப் லியோ.
* ஆயர் இராயப்பு ஜோசபின் சிந்தனைகளை கருவறுக்கும் சமூக ஊடகப் பதிவுகள்! மன்னார், வன்னி பெருநிலப்பரப்பின் ஆன்மா..
* முள்ளிவாய்க்கால் - காசா ஒப்பிடும் மேற்கு ஊடகங்கள்.. வெளியுறவுக் கொள்கையின் அவசியம்...
* இனங்களுக்குள் சதித்திட்டங்கள், கண்டிக்கிறார் லியோ...
மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது, வெறுமனே இறுதிப் போரில் உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் போராளிகளை நினைவு கூரும் நிகழ்வு அல்ல. அது ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான (Right to Self-Determination) அங்கீகாரத்துடன் தொடர்புடையது.
மே 18 என்பது வெறும் அரசியல் நிகழ்வு அல்ல, அது போரில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல இலட்சம் தமிழர்களின் ஆன்மாக்களுக்கான நீதி மற்றும் கூட்டுத் துக்கத்தின் அடையாளம் (Collective Mourning) என்பதை ஐ.நா பிரநிதிகளுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் துணிவோடு கூறியவர் முன்னாள் ஆயர் அமரர் இராயப்பு ஜோசப்.
ஆயர் இராயப்பு ஜோசப் சமர்ப்பித்த அறிக்கைகளும், முன்வைத்த தார்மீகக் கருத்துகளுமே, இன்று சர்வதேச ரீதியில் மே 18 ஆம் திகதியை "தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக" (Tamil Genocide Remembrance Day) கனடா போன்ற அங்கீகரிப்பதற்கான காரண - காரியமாகும்.
ஆயர் இராயப்பு ஜோசப் கனடா இராஜதந்திரிகள் மற்றும் கொழும்பில் உயர்ஸ்தானிகர்களை (High Commissioners) பலமுறை நேரில் சந்தித்துப் பேசி வலுவான ஆதாரங்கள் மற்றும் நேரடிச் சாட்சியங்களை பதிவு செய்திருந்தார்.
ஐ.நா மனித உரிமைச் சபையில், இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு மிக முக்கியமான வரலாற்று அத்திவாரமாக அவை விளங்குகின்றன.
முள்ளிவாய்க்கால் என்பது கடந்த கால ஒரு நிகழ்வு மட்டுமல்ல, அது "உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ளத் தவறியதால் உருவான, காசா போன்ற தற்காலப் பேரழிவுகளுக்கான ஒரு வரலாற்று முன்னுதாரணம்" என்ற கோணத்தில் இந்த 2026 ஆம் ஆண்டிலும் வெளியிட்ட கட்டுரைகளில் மேற்கு - ஐரோப்பிய ஊடகங்கள் விவாதித்துள்ளன.
ஐரோப்பிய நாடாளுமன்றங்கள், ஐ நா மனித உரிமைச் சபை அமர்வுகளில் ஈழத்தமிழர் விவகாரம் விவாதிக்கப்படும் போது, ஆயர் இராயப்பு ஜோசப் துணிச்சலாக வெளியிட்ட "146,679 காணாமல் ஆக்கப்பட்ட மக்கள்" பற்றிய தரவுகள் இன்றும் முதன்மை ஆதாரமாக எடுத்து, போரை தடுத்து நிறுத்தத் தவறிய ஐ.நா என்று குற்றம் சாட்டுகின்றன.
ஆயர் இராயப்பு ஜோசப் மறைந்த பின்னரும் கூட, அவர் முன்வைத்த ஆதாரங்கள் - சமர்ப்பித்த ஆவணங்கள் சர்வதேச அரங்கில் தொடர்ந்தும் பேசப்படுகிறது என்றால், தமிழ்த்தேசியக் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் இந்த 2026 ஆம் ஆண்டு வரையும் பொருத்தமான சர்வதேச நகர்வுகளை தொடர்ந்து கையாண்டிருந்தால், ஈழத்தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதிக்குரிய கிட்டிய தூரத்தை எட்டியிருக்கலாம் என்பதை உணர்த்துகின்றன
ஆனால், இன்று உள்ளகப் பொறிமுறைக்கு அமைவான அரசியல் தீர்வுகள் பற்றியே தமிழ்த் தேசியக் கட்சிகள் பேசிக் கொண்டிருக்கின்றன. அவ்வப் போது, அதாவது தேர்தல் பிரச்சாரக் காலத்தில் மாத்திரம், 'இன அழிப்பு" - "சர்வதேச நீதி" என்று மார் தட்டுகின்றனர்.
சர்வதேச சட்டங்கள் தற்போதைய புவிசார் அரசியல் போட்டிச் சூழலில், கையாளப்பட வேண்டிய அணுகுமுறைகள் எதுவும் அற்ற ஒரு நிலையில், ஈழத் தமிழர்களுக்கான வெளியுறவுக் கொள்கை பற்றியும் பேசுகின்றனர்.
ஈழத் தமிழர்களுக்கான வெளியுறவுக் கொள்கை என்பது, இலங்கையின் உள்ளக பொறிமுறை ஊடாக அரசியல் தீர்வை முன்வைக்க முடியாது என்ற உள்ளடக்கத்தை வெளிப்படுத்துகிறது.
ஆனால், வெளியுறவுக் கொள்கை ஏன் அவசியம் என்பதன் உள்ளடக்கம் புரியாமல், அல்லது புரிந்துகொண்ட நிலையில், ஒப்பாசாரத்துக்காக, தமிழர்களுக்கான வெளியுறவுக் கொள்கை என்று முதன்மைப்படுத்திப் பேசுகின்றனரே தவிர, நேர்மையான நோக்கில் அல்ல என்பது தெரிகிறது.
ஆயர் இராயப்பு ஜோசப் "ஈழத் தமிழர்களுக்கான தனித்துவமான இராஜதந்திர வெளியுறவுக் கொள்கை" (Foreign Policy) மற்றும் சர்வதேச நகர்வுகள் தார்மீக அடிப்படையில் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி மிகத் தெளிவாகப் பேசியுள்ளார், அதனைத் தீவிரமாக வலியுறுத்தியும் உள்ளார்.
ஒரு மதத் தலைவராக இருந்தாலும், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான நகர்வுகள் வெறும் உள்நாட்டு அரசியலோடு நின்றுவிடாமல், சர்வதேச மட்டத்திலான ஒரு வெளியுறவுக் கொள்கையாக மாற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
ஆனால், ஆயர் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இயற்கை எய்தியதின் பின்னரான கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழ்த் தேசியக் கட்சிகள் எதுவும் ஆயர் விதந்துரைத்த வெளியுறவு கொள்கை பற்றி பேசவுமில்லை, அதற்கான வரைபடம் கூட தயாரிக்கப்படவும் இல்லை.
வடக்கு கிழக்கில், 2009 மே மாதத்தில் இருந்து கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சதிக் கோட்பாடுகள், (Conspiracy Theories) ஆயரின் மறைவுக்குப் பின்னரான சூழலில் தான், மேலும் புதிய வெவ்வேறு உத்திகள் ஊடாகக் கையாளப்பட்டு அவை விரிவாக்கம் செய்யப்படுகின்றன.
கத்தோலிக்க திருஅவையின் மன்னார் மறைமாவட்டத்துக்கு ஈழத்தமிழர் அரசியல் போராட்டத்தில் பிரதான வகிபாகம் உண்டு. அங்கு சாதி சமய வேறுபாடுகளுக்கு அப்பால், வன்னி பெருநிலப்பரப்பு என்பதை கருப்பொருளாகக் கொண்ட பண்பாட்டு செயற்பாடுகள் மரபுவழியாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு முறைமையும் உண்டு.
அங்கு சாதி சமய வேறுபாடுகளுக்கு அப்பால், 'வன்னி பெருநிலப்பரப்பு' என்ற மண்ணின் ஆன்மாவை கருப்பொருளாகக் கொண்ட பண்பாட்டுச் செயற்பாடுகள் மரபுவழியாகப் பேணப்பட்டு வருகின்றன.
வத்திக்கான் திருத்தந்தையின் அங்கீகாரத்துடன், 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மன்னார் மறைமாவட்டம், சமய வேறுபாடுகளுக்கு அப்பால், ஈழத்தமிழர்கள் என்ற மரபுரிமை அடையாளத்தை பேணி வந்தது.
ஆனால், ஆயரின் மறைவின் பின்னரான சூழலில் அங்கு விதைக்கப்பட்ட சதிக் கோட்பாடுகள், நேர்மையான சிந்தனை கொண்ட மாற்றுக் கருத்துள்ள மக்கள் மத்தியில் அவசியமற்ற - ஆதாரமற்ற உணர்வுகளை தூண்டி, ஒட்டுமொத்த கத்தோலிக்கத் திருஅவையின் சுயமரியாதைக்கு கேடு விளைவிக்கின்றன.
2020 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு ஆயர் மன்றம் (Northern and Eastern Bishops' Council) உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக திருகோணமலை ஆயர் நோயல் இமானுவேல் செயற்படுகிறார்.
இந்த மன்றம், சமய பணிகளுக்கு அப்பால் அரசியல் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடுகிறது. இது இலங்கையின் ஒட்டுமொத்த கத்தோலிக்க ஆயர் பேரவைக்கு (Catholic Bishops' Conference of Sri Lanka - CBCSL) எதிரானது அல்ல.
மாறாக, தமிழர் தொடர்பான அரசியல் நிலைப்பாடுகள், தேவையான அபிவிருத்திகள், உதவிகள் போன்றவற்றை, கொழும்பை மையப்படுத்தி தென்னிலங்கை திருஅவைக்கு தெளிவுபடுத்தக் கூடிய சாதகமான போக்கு ஏற்பட்டுள்ளது.
தென்னிலங்கை திருஅவை அவ்வப்போது இலங்கை அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட்டு வந்தது. ஆரம்ப காலங்களில், வடக்கு கிழக்கு திருஅவை, தனித்துவமாக இயங்குவதில் பல தடைகளும் நிலவின.
இப் பின்புலத்தில், 2020 ஆம் ஆண்டு முதல் இந்த ஆயர் மன்றம் சுயாதீன அமைப்பாக இயங்க ஆரம்பித்துள்ளது. ஆயர் மன்றத்தின் உணர்வுகளை தென்னிலங்கை திருஅவையும், புரியக் கூடிய முறைமைகள் உருவாகி வருகின்றன.
ஆகவே, இப்பின்னணியில், மன்னார் மறைமாவட்டம் குறித்து சமூக ஊடகங்களில் முறைமுக பெயர்களில் முன்வைக்கப்படும் ஆதாரமற்ற வன்மப் பிரச்சாரங்கள், தமிழ்க் கத்தோலிக்க திருஅவைக்கு மாத்திரமல்ல, ஈழத்தமிழர் அரசியல் விடுதலை விவகாரங்களிலும், சமூகச் செயற்பாடுகளிலும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்துகள் உண்டு.
சென்ற மாதம் ஆபிரிக்க நாடான கமரூனுக்கு சென்ற திருத்தந்தை 14 ஆம் லியோ, அங்கு நிலவும் உள்நாட்டுப் போரின் பின்னணிகள் - சதிக் கோட்பாடுகள் குறித்து பேசும்போது, "தங்களின் இராணுவ, பொருளாதார அல்லது அரசியல் ஆதாயங்களுக்காக இறைவனின் பெயரால் மதத்தைக் கருவியாகப் பயன்படுத்தி சதி செய்வோரை" கடுமையாகக் கண்டித்தார்.
வன்முறையும் ஆயுத மோதல்களும், பிளவுகளும் தீவிரமாக நிலவும் கமரூன் நாட்டில் தீய சக்திகள், புனிதமான அம்சங்களை இருளுக்குள் தள்ளுவதாக சுட்டிக்காடடினார்.
கத்தோலிக்க திருஅவைக்குள் பிளவுகளை ஏற்படுத்தவும், அரசியல் விடுதலைக்காக போராடும் இனங்களுக்குள் சதித்திட்டங்களை உருவாக்கவும் முற்படும் இரகசிய அமைப்புகள் மற்றும் அவற்றின் சதிக் கோட்பாடுகளுக்கு எதிராக திருத்தந்தை லியோ, மிகக் கடுமையான கருத்துக்களை அங்கு முன்வைத்துள்ளார்.
நாடுகள் மத்தியில் தூண்டப்படும் சதிக் கோட்பாடுகள், இன்று உலக அரசியலில் பெரும் குழப்பங்கள் ஏற்படக் காரணம் என்றும் லியோ அங்கு விபரித்துள்ளார்.
ஆபிரிக்க நாடுகள், தங்களுக்குரிய சுயநிர்ணய உரிமையை நன்கு பிரயோகிப்பதைத் தடுத்து, அங்கு ஆயுத மோதல்கள், வன்முறைகள் ஆகியவறறைத் திட்டமிட்டு விதைக்கும் சக்திகளின் சதியை திருத்தந்தை லியோ அம்பலப்படுத்தினார்.
ஆகவே, ஈழத்தமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தைப் பெற, கட்சி அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால், ஒருமித்த குரலில் செயற்படுவதற்குரிய சாதகமான சிந்தனைகள் உலக அரங்கில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இப் பின்புலத்தில், தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சதிக் கோட்பாடுகளை பகிரங்கப்படுத்தி, அரசியல் தீர்வுக்கான சரியான வகிபாகத்துக்குரிய பொறிமுறைகளை, இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உறுதிப்படுத்த வேண்டும்.
அமெரிக்க - ஈரான் போர் உள்ளிட்ட உலக மோதல்கள், இன மோதல்களில் தலையிட்டு உரிய தீர்வை முன்வைக்க வேண்டும் என தற்போது குரல் கொடுத்து வரும் திருத்தந்தை லியோவை சந்தித்து உரையாட, தமிழ்த் தரப்பு முயற்சிக்க வேண்டும்.
அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்
Editor