திடீர் விலை உயர்வுகளால் மக்களுக்கு சொல்லொணாத் துயரம் - சஜித் பிரேமதாசா
திடீர் விலை உயர்வுகளால் மக்களுக்கு சொல்லொணாத் துயரம்
நாட்டில் அதிவேகமாக உயர்த்தப்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களை உடனடியாகக் குறைத்து, மக்களுக்கென ஒரு சிறப்புப் பொருளாதார நிவாரணப் பொதியை அரசாங்கம் வழங்க வேண்டும்" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சிறப்புக் காணொளியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"திடீர் விலை உயர்வுகள் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் கொடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சாமானிய மக்களின் வேதனைகளை அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது. எரிவாயு விநியோகத்தில் நிலவும் நிச்சயமற்ற நிலையும், தொடர்ந்து ஏற்படும் விலை அதிகரிப்புகளும் பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளன.
மத்திய கிழக்குப் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடப்படக் கூடிய அபாயம் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்படும் என நாங்கள் நாடாளுமன்றத்தில் முன்னதாகவே எச்சரித்திருந்தோம். எனினும், ஆரம்பத்தில் அதனைப் பொருட்படுத்தாத அரசாங்கம், இப்போது அதன் பாதிப்புகளை மக்கள் மீது சுமத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன், தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், மலேசியா மற்றும் எகிப்து போன்ற நாடுகள் உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமது மக்களுக்குப் பல்வேறு நிவாரணங்களை வழங்கி வருகின்றன. அதைப் போன்றே, இலங்கையிலும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை மையமாகக் கொண்ட ஒரு சிறப்புப் பொருளாதார நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் கருவூலத்தில் கூடுதல் நிதி இருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியம் நாட்டின் வருமானம் அதிகரித்திருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த வளங்களைப் பயன்படுத்தி எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும். மக்கள் உண்மையிலேயே பயனடையக் கூடிய நிவாரணப் பொதியொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால், அதற்கு எதிர்க்கட்சி முழு ஆதரவையும் வழங்கும்.
மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பல்ல; மாறாக, அவர்கள் வாழ்வதற்கான வழிகளைச் செய்துகொடுப்பதே அரசாங்கத்தின் கடமையாகும். எனவே, துன்புறும் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" – என்று சஜித் பிரேமதாஸ மேலும் வலியுறுத்தியுள்ளார்.