சமஸ்டி - சுயநிர்ணய உரிமை இரண்டும் ஒன்றல்ல
சமஸ்டி - சுயநிர்ணய உரிமை இரண்டும் ஒன்றல்ல
*சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த வாரம் வெளியான உண்மை
*13 ஆவது திருத்தத்தின் பின்னர் இலங்கை அரசியல் யாப்பு சமஸ்டி முறையாக மாற்றமடைந்துள்ளது என அரசியல் விஞ்ஞான பாட நூலில் குறிப்பிடப்படும் அர்த்தம் என்ன?
*கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்தன, பேராசிரியர் ஜயதேவ உயன்கொட ஆகியோர் 13 ஐ சமஸ்டியுடன் ஒப்பிடுகின்றனர்...
சமஸ்டி ஆட்சி முறைமை என்பதற்குள் சுயநிர்ணய உரிமை இருப்பதாக தற்போது, தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் சிலர் புதிய வடிவிலான - மிகத் தவறான கற்பிதங்கள் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இது, சம்பந்தன் 2015 ஆம் ஆண்டு கூறிய ”ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி” என்ற கூற்றுக்கு ஒப்பானது.
சமஸ்டி ஆட்சி முறைமை (Federalism) சுயநிர்ணய உரிமை (Self-determination) என்ற இரண்டு கோட்பாடுகளும் நவீன அரசியல் வடிவில் மேற்கத்திய அறிஞர்கள் முன்வைத்த கற்பிதங்கள். இந்த இரு கோட்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை அல்ல.
இந்த இரு கோட்பாடுகளின் மூல வேர்கள் (Raw Roots) பண்டைய கால சமூக அமைப்புகளில் காணப்படுகின்றன. இருந்தாலும் அதன் மூல வேர்களின் மையக் கருத்துகளை மேற்கத்திய அறிஞர்கள் தத்தமது அரசுகளை பாதுகாக்கும் நோக்கில் வடிவமைத்திருக்கின்றனர் என்பதை அவர்களுடைய ஆய்வு நூல்கள் வெளிப்படுத்துகின்றன.
தற்போது தமிழர் பிரதேசங்களில் இலங்கை ஒற்றையாட்சி முறையை பாதுகாக்கும் பின்னணியுடன், சுயநிர்ணய உரிமை பற்றிய பிழையான சித்தாந்தங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அதாவது, சுயநிர்ணய உரிமை என்பதை தவிர்ப்பதற்காக சமஸ்டி முறை பற்றி தமக்கு ஏற்றவாறு வளைத்து விளக்கமளிக்கப்படுகிறது.
அதேநேரம், இப் பிழையான சமஸ்டி என்பதை முன்வைத்து பேசிக் கொண்டு, 13 ஆவது திருத்தச் சட்டத்தை சிங்களவர்கள் ஏற்காத நிலையில், சமஸ்டியை எப்படிக் கோர முடியும் என்ற நச்சுத்தன்மை கொண்ட உளவியல் கருத்தை தமிழர் பிரதேசங்களில், மற்றொரு தரப்பினர் பரப்புகிறது.
1776 இல் அமெரிக்க சுதந்திரப் பிரகடனம், 1789-இல் பிரெஞ்சு புரட்சியின் போது "மக்களின் இறையாண்மை" என்ற வடிவில், சுயநிர்ணய உரிமை என்பதன் வேர்கள் தோற்றம் பெற்றன.
1860 களில் அதாவது 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தேசியவாதம் (Nationalism) எழுச்சியடைந்த போது, "சுயநிர்ணய உரிமை" என்ற சொல் முதன்முதலில் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது.
“ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் விடுதலை” “தேசியம்” “சுதந்திர வர்த்தகம்” போன்றவற்றை மையப்படுத்தி 14 அம்சத் திட்டம் (Fourteen Points) ஒன்றை முன்வைத்து சுயநிர்ணய உரிமை என்பதற்குரிய உள்ளடக்கத்தை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வூட்ரோ வில்சன் 198 இல் முன்வைத்தார்.
ஆனால், 1960 - காலப்பகுதியில் தான், ஒரு நாட்டின் எல்லைகளை மாற்றாமல், அந்த நாட்டுக்குள்ளேயே மக்கள் தங்களைத் தாங்களே ஆளும் "உள்ளக சுயநிர்ணய உரிமை" என்ற கருத்து பேச ஆரம்பிக்கப்பட்டது.
ஏனெனில் தங்கள் அரசுகளின் “இறைமை“ - “தன்னாதிக்கம்” போன்ற அதிகாரத் தன்மைகள் மாறுபடாமல் இருக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி, ”உள்ளக சுயநிர்ணய உரிமை” என்ற கருத்துருவாக்கம் வலுப்பெற்று வருகிறது.
சமஷ்டி, சோஷலிசம், இனக்குழுமம், சோவியத் யூனியன் யுகோஸ்லாவியா அனுபவங்கள் (Federalism, Socialism and Ethnicity: The Experience of the Soviet Union and Yugoslavia) என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதிய பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, இந்த நாடுகளில் சமஷ்டி முறைகள் தோல்வி அடைந்தது என விவரிக்கிறார்.
அதேநேரம் கனடா, பெல்ஜியம், இந்தியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள சமஷ்டி அரசியல் யாப்பு முறைமைகள், தமிழர்களின் அரசியல் தீர்வுகளுக்கு உரிய பாடங்களாகக் கருத முடியும் என்பது பற்றியும் அந்த நூலில் ஆய்வு செய்து நியாயப்படுத்துகிறார்.
கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்தன, பேராசிரியர் அமரர் லக்ஷ்மன் மாரசிங்க ஆகியோரால் 2010 இல் தொகுக்கப்பட்ட "13ஆவது திருத்தம்: நடைமுறை குறித்த கட்டுரைகள்” (13th Amendment: Essays on Practice) என்ற நூலில் 13ஆவது திருத்தம் பெயரளவில் ஒற்றையாட்சியாக இருந்தாலும், அது சமஸ்டி பண்புகளை (Federal characteristics) பிரதிபலிப்பதாக விளக்கப்பட்டுள்ளது.
ஆகவே தங்களை முற்போக்காளர் என்று கூறிவரும் சில சிங்கள அரசியல் ஆய்வாளர்கள் - சிங்கள சட்டத்தரணிகள் சமஸ்டி பற்றி குழப்பமான கருத்துக்களை சமூகத்தில் பரப்புகின்றனர். சில தமிழ் சட்டத்தரணிகளும் சமஸ்டி பற்றி குழப்பான கருத்துக்களை பரப்புகின்றனர்.
அது மாத்திரமல்ல, க.பொ.த உயர்தர மாணவர்கள் கற்கும் அரசியல் விஞ்ஞான பாடத்திற்குரிய ஆசிரியர் கைநூலில், இலங்கை அரசியல் யாப்பு, 1987 ஆம் ஆண்டு உருவான 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பின்னர், சமஸ்டி தன்மை கொண்டது எனவும் வியாக்கியானம் செய்யப்படுகிறது.
காணி - பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அது இந்திய அரசியல் யாப்பு தன்மையாக மாற்றமடையும் எனவும் அந்த ஆசிரியர் கைநூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் அரசியல் யாப்பின் முதலாம் அத்தியாயத்தில் உள்ள 2 ஆம் சரத்தில் (Article 2) ஒற்றையாட்சி (Unitary State) அதாவது "இலங்கை குடியரசு ஓர் ஒற்றையாட்சி அரசாகும்" என பிரகடனப்படுத்துகிறது.
அத்துடன் அரசியலமைப்பின் இரண்டாம் அத்தியாயத்தில் உள்ள 9 ஆம் சரத்தில் (Article 9) இலங்கை குடியரசில் பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் (Foremost Place) என குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்த சாசனத்தைப் பாதுகாப்பதும் போற்றி வளர்ப்பதும் “இலங்கை அரசு” என்ற கட்டமைப்பின் கடமையாகும் என்றும் இந்தச் சரத்து விபரிக்கிறது.
ஆகவே, அரசியல் யாப்பில் இவ்வாறு கூறப்படும் பின்னணியில், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பின்னர் இலங்கை அரசியல் யாப்பு சமஸ்டித் தன்மை கொண்டது என்று எந்த அடிப்படையில் அரசியல் விஞ்ஞான பாட ஆசிரியர் கைநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுவது நியாயமானதே.
உண்மையில், சமஸ்டி என்பது சுயநிர்ணய உரிமையை ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைமுறைப்படுத்தும் ஒரு வடிவம். ஆனால், சுயநிர்ணய உரிமை என்பது சமஸ்டியையும் கடந்து, ஓர் இனத்தின் தேசிய அடையாளத்தை உள்ளடக்கிய ஒரு பரந்த தார்மீக உரிமை என பொருள் கொள்ள முடியும்.
ஆகவே சமஸ்டி - சுயநிர்ணய உரிமை என்ற இரண்டும் ஒன்றல்ல என்பது உறுதியானது.
ஆனால், மேற்கு - ஐரோப்பிய நாடுகள், சமீபகாலமாக இலங்கை போன்ற சிறிய அரசுகள், புவிசார் அரசியல் நலன் நோக்கில் தமக்குத் தேவை என்பதால், அந்த நாடுகளில் வாழும் ஏனைய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பதை, சமஸ்டிக்குள் முடக்கும் ஏற்பாடுகளை மிக நாசுக்காக தூண்டிவிடுகின்றன.
இப் பின்னணியோடு தான், வடக்கு கிழக்கில் சில நகர்வுகளை அவதானிக்க முடிகிறது.
13 ஆவது திருத்தச் சட்டத்தை சமஸ்டி முறைமைக்குள் கொண்டு வரும் ஆரம்ப ஏற்பாடுதான், அரசியல் விஞ்ஞான பாடநூலின் ஆசிரியர் கையேட்டில் புகுத்தப்பட்டமை என்பது பட்டவர்த்தனமாகிறது.
இது நல்லாட்சி என மார்தட்டிய மைத்திரி - ரணில் அரசாங்கம் 2017/2018 ஆம் ஆண்டுகளில் பாடநூல் ஊடாக சமஸ்டி என்ற அந்த நஞ்சை விதைத்தது.
தற்போது, 2026 ஆம் ஆண்டு ஆசிரியர் பாடநூல் கையேடுகளின் படி, “சமஸ்டி தன்மை” (Federal character) "பகுதிச் சமஸ்டி" (Quasi-federal) என்ற கோணங்களில் சிங்கள மாணவர்களுக்கு பொருள்கோடல் செய்யப்படுகின்றன.
இப்புலத்தில் இப் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட எழுதி வரும் சமஸ்டி முறை பற்றிய கட்டுரைகள், இலங்கை ஒற்றையாட்சி முறைமையை மேலும் பேணக்கூடிய அளவுக்கு மாணவர்களுக்கு மூளை சலவை செய்கின்றன என்ற முடிவுக்கு வரலாம்.
ஏற்கனவே, வரலாற்று பாட நூல்களில் தமிழர் வரலாறுகள் - தமிழர் தொல்லியல் அடையாளங்கள் மறைக்கப்பட்டு வரும் நிலையில், அரசியல் விஞ்ஞான பாட நூலில் 13 ஆவது திருத்தம் சமஸ்டி ஆட்சி தன்மைக்கு ஒப்பானது என்ற புதிய கற்பனை, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய பேச்சுக்களை முற்றாக நீக்கம் செய்கின்றன.
இவ்வாறான சிந்தனைகள், சிங்கள அரசியல் தலைவர்களிடம் 1948 இல் உருவாகி, 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான சூழலில் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதையே இந்த நகர்வுகள் காண்பிக்கின்றன.
குறிப்பாக 1949 இல் முதன் முதலில் கல்லோயாவில் ஆரம்பிக்கப்பட்ட குடியேற்ற நோக்கம், இன்றைய அநுர அரசாங்கத்தின் காலத்தில் கிவுல் ஓயா நீர்ப்பாசன குடியேற்றம் வரை வந்து நிற்கிறது.
1983 இல் இஸ்ரேலின் மொசாட் குடியேற்ற முறைகள் பற்றி அன்று ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு சொல்லிக் கொடுத்த தகவல்கள் உண்டு. 1967 இல் பலஸ்தீனத்தில் ஆரம்பித்த யூத குடியேற்றங்களுக்கு ஒப்பாக வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்கள் இன்று வரை கன கச்சிதமாக அரங்கேறுகின்றன.
கடந்த வாரம் சர்வதேச நீதிமன்றத்தில் இடம்பெற்ற பலஸ்தீன இன அழிப்பு பற்றிய வழக்கு விசாரணையில், 1967 இல் இருந்து இஸ்ரேல் மேற்கொண்ட யூத குடியேற்றங்கள் சட்ட தன்மை அற்றது என முழுமையாக நிறுவப்பட்டுள்ளது.
2024 ஜூலை மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் தொடர்ந்து இன அழிப்புச் செயற்பாட்டில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதால், இந்த இன அழிப்பு பற்றிய விவாதம் இடம்பெற்றது.
இஸ்ரேலின் “காணி ஆக்கிரமிப்பு” - “இன அழிப்பு” தொடர்வதால் சுயநிர்ணய உரிமை என்பதன் பொருள் கோடல் நீதிமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளன.
அதேநேரம், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், சீனா பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கடந்த வாரம் சர்வதேச நீதிமன்றத்தில் பகிரங்கமாக முன்னிலையாகி இருந்தன.
பலஸ்தீனத்தில் 1967 இல் இருந்து இஸ்ரேல் மேற்கொண்டு வரும் குடியேற்றங்களுக்கு ஒப்பான குடியேற்றம் 1948 இல் இருந்து இன்று வரையும் வடக்கு கிழக்கில் இடம்பெறுகிறது. ஆனால், அக் குடியேற்றங்கள் சட்டத்திற்கு முரணானது என்று நிரூபிக்க முடியாத சூழலில் தமிழர் தரப்பு உள்ளது.
அரச அற்ற தேசிய இனமாக சர்வதேச சட்டங்களை பயன்படுத்தி செய்ய வேண்டிய பொறுப்புகளில் இருந்து விலகி, தற்போது சமஸ்டி தீர்வு பற்றி தமிழ்த் தரப்பு உரையாடுவது வேடிக்கை.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் (Tamils Homeland) என குறிப்பிடப்படவில்லை. மாறாக வரலாற்று வாழ்விடங்கள் (Historical Habitation) என்று தான் உள்ளது.
அதாவது, சிங்களவர்களும் இப் பிரதேசத்தில் வாழ்ந்தார்கள் ஆகவே அவர்கள் அங்கு குடியேற முடியும் என்ற அங்கீகாரத்தை பெறவே வரலாற்று வாழ்விடங்கள் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
”தமிழர் தாயகம்“ என ஒப்பந்தத்தில் குறிப்பிட முடியாது என ஜே.ஆர் பிடிவாதமாக நின்றதாக, அப்போது கொழும்பில் தூதுவராக இருந்த ஜே.என்.டிக்சிட் எழுதிய அசைன்மென்ட் (Assignment Colombo) என்ற நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஸ
ஆகவே, பலஸ்தீன மக்கள் துணிவோடு தமது கோரிக்கைகளை தரம் இறக்காமல் உறுதியாக நிற்பது போன்று, தமிழர் தரப்பு செயற்பட வேண்டும். “இலங்கை அரசு“ என்ற கட்டமைப்பும், சிங்கள அரசியல் தலைவர்களும் 1948 லிருந்து இன்று வரை ஒரு புள்ளியில் நின்று வடக்கு கிழக்கு பற்றி சிந்தித்து செயல்படுவது போன்று, 2009 ஆம் ஆண்டின் பின்னரான சூழலில் தமிழர் தரப்பு ஒரு புள்ளியில் நின்று இயங்கவில்லை.
மாறாக ”கட்சி அரசியல் முரண்பாடுகள்” - ”தனிநபர் மோதல்கள்” மாத்திரமே வளர்ந்து வருகின்றன. இப் பின்னணியில் தான், சுயநிர்ணய உரிமை என்ற பலமான தமிழ்த் தேசிய அரசியல் நியாயம் நிர்க்கதிக்கு உள்ளாகி வருகிறது.
ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமை என்பது கட்சி அரசியல் செயற்பாடுகளைக் கடந்த “அரசியல் விடுதலை” என்பதை மனதில் கொள்ள வேண்டும். சுயநிர்ணய உரிமை என்பது அரசியல் கோரிக்கை அல்ல, அது அடிப்படை உரிமை என்பதை புரியத் தலைப்பட வேண்டும்.
அ.நிக்ஸன்-பத்திரிகையாளர்
Editor