இணையவழி மோசடி வலையமைப்பு – தென் பகுதியில் 198 வெளிநாட்டவர்கள் கைது !
இணையவழி மோசடி வலையமைப்பு – 198 கைது !
தென்னிலங்கையின் காலி, ஹிக்கடுவ, மிதிகமை ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், வெளிநாடுகளைக் குறிவைத்துப் பெருமளவு இணையவழி மோசடிகளை (cyber crimes) இழைத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 198 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர்களில் பெரும்பாலானோர் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இதில் 173 இந்தியர்களும் 25 நேபாளிகளும் அடங்குவர். இவர்களில் பலர் தென் மாகாணத்தில் வாடகை இல்லங்களிலும் விருந்தினர் இல்லங்களிலும் இருந்து செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
19 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என நம்பப்படும் சந்தேகநபர்கள் தற்போது விசாரணையாளர்களால் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றனர்.
மே மாதம் 11 ஆம் திகதி மிடிகம பொலிஸார் பின்வத்தைப் பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் சோதனை நடத்தி 33 நபர்களைக் கைது செய்தனர். இக்குழுவில் 28 இந்தியர்களும் 5 நேபாளிகளும் அடங்குவர்.
ஹிக்கடுவ, தொடந்துவ பகுதியிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 35 இந்தியர்களும் 20 நேபாளிகளும் கைதாயினர். அவர்களுக்குத் தங்குமிடம் வழங்கிய 43 வயதான ஓட்டல் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.
காலி நகரில் தனித்தனி இரண்டு தங்கும் விடுதிகளில் இருந்து 110 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
மூன்று இடங்களிலிருந்தும் பொலிஸார் மொத்தம் 83 கணினிகள் மற்றும் 198 கைப்பேசிகள் மீட்டனர். இவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) போரன்சிக் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
கூடுதலாக, ஹிக்கடுவ நடவடிக்கையில் 25 கணினிகள், 119 கைப்பேசிகள், ஏறத்தாழ 750,000 ரூபாய் ரொக்கம் மற்றும் இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதானவர்கள் மீது பின்வரும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட உள்ளன:
கைதானவர்கள் மீது கணினிக் குற்றச் சட்ட மீறல், செல்லுபடியாகாத விசாக்களுடன் இலங்கையில் தங்குதல், மற்றும் சுற்றுலா விசாவில் வேலை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன.
மேலும், சில நபர்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செயப்பட்ட சுங்கவரியில்லா சிகரெட்டுகளையும் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வலைப்பின்னல் அதிநவீன இணைய மோசடிகள் மற்றும் கணினி தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டிருந்ததாக விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவா்களின் இணையவழி குற்றச் செயல்கள் மற்றும் அவா்களது நடவடிக்கைகள் குறித்து மேலதிக விசாரணைகள் நடை பெற்று வருவதாக பொலிஸாா் தெிவித்துள்ளனா்
Editor