அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை மறைப்பது கவலைக்குரியது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸா
அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை மறைப்பது கவலைக்குரியது
அரசியல்வாதிகள் வைத்திருக்கும் சொத்துகள் மற்றும் சொத்துரிமைகளை சரியான முறையில் வெளிப்படுத்தினால் அது பிரச்சினையாகாது என அமைச்சரவை பேச்சாளர்அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்களது உண்மையான சொத்துகள் மற்றும் கடன்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும், அவை நியாயமான முறையில் சம்பாதிக்கப்பட்டதா என்பதை தீர்மானிக்கும் வாய்ப்பு இதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எங்களின் அனைத்து சொத்துகள் மற்றும் கடன்களையும் நாம் வெளிப்படுத்தியுள்ளோம். யாரும் சொத்துகள் வைத்திருக்கலாம். ஆனால் அவை எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பதை நியாயமாக விளக்குவது மிகவும் முக்கியம்,” என அவர் கூறினார்.
மேலும், ஒரு அரசியல்வாதி தன்னுடைய செல்வத்தை எவ்வாறு பெற்றார் என்பதை வெளிப்படுத்தத் தவறுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அமைச்சர் லால் காந்த அவர்களின் சொத்துகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அதுகுறித்த குற்றச்சாட்டுகளை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு எதிராக அமைச்சர் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இவ்விடயத்தில் தேவையானால் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Editor