புதிய VAT திருத்தம் மக்களையும் வணிகர்களையும் சுரண்டும் செயல் – சஜித் பிரேமதாச

புதிய VAT திருத்தம் சுரண்டும் செயல்

புதிய VAT திருத்தம் மக்களையும் வணிகர்களையும் சுரண்டும் செயல் – சஜித் பிரேமதாச

ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள புதிய மதிப்புக்கூட்டல் வரி (VAT) திருத்தம் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (SMEs) மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு அரசு புதிய வரி மாற்றங்களை கொண்டு வர முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக  குற்றஞ்சாட்டினார்.

ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ள இந்த VAT நடைமுறை பொருளாதார சீர்திருத்தம் அல்ல; மாறாக மக்களையும் வணிகர்களையும் சுரண்டும் நடவடிக்கையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பின் படி, VAT அமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக நிதி சேவைகளுக்கான VAT விகிதம் 18 சதவீதத்திலிருந்து 20.5 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.

மேலும் இதுவரை VAT வலையில் சேராதிருந்த பல சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் புதிய திருத்தத்தின் கீழ் வரி செலுத்துநர்களாக பதிவு செய்ய வேண்டிய நிலை உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை, டிஜிட்டல் தளங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கும் VAT வரி அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ X சமூக வலைதளக் கணக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த புதிய வரி நடைமுறைகள் வணிகர்களின் வரிச்சுமையை மேலும் அதிகரிக்கும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“வரி மட்டும் கொண்டு பொருளாதாரம் வளராது; வணிகர்களுக்கு சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் அவர்கள் வீழ்ச்சி அடைவார்கள்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வணிகர்கள் பாதிக்கப்படின் எதிர்காலத்தில் அரசுக்கு வசூலிக்க வருவாய் கூட இல்லாமல் போகும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

வரி வலையை விரிவுபடுத்துதல், வரி விகித உயர்வு மற்றும் விதிமுறைகளை கடுமைப்படுத்துதல் ஆகியவை ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதால், நாட்டின் முழு பொருளாதாரமும் கடும் அழுத்தத்திற்குள்ளாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.