புதையல் தோன்டிய விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் கைது!
புதையல் தோன்டிய விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் கைது!
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் உட்பட நால்வர் இன்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (11)அதிகாலை 5 மணியளவில் குறித்த பகுதியில் பொலிஸார் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டனர். இதன்போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டமையுடன் அவர்களிடமிருந்து பூஜைப் பொருள்கள், அகழ்வு உபகரணங்கள் மற்றும் 6 கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வாழைச்சேனை விசேட அதிரடிப் படை முகாமில் கடமையாற்றுபவர் என்பதுடன், தற்போது விசேட கடமை நிமித்தம் மகா ஓயா முகாமில் இணைக்கப்பட்டுள்ளார். 36 வயதுடைய இவர் மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஏனைய மூவரும் உறுகாமம், தெய்யத்தகண்டி மற்றும் பெரிய புல்லுமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 44 மற்றும் 48 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளைக் கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Editor