அமெரிக்கா - ஈரான் பேச்சு முறிவா, அல்லது இந்தியா - பாகிஸ்தான் மோதலா???

அமெரிக்கா - ஈரான் பேச்சு முறிவா ?

அமெரிக்கா - ஈரான் பேச்சு முறிவா, அல்லது இந்தியா - பாகிஸ்தான் மோதலா???
அமெரிக்கா - ஈரான் பேச்சு முறிவா, அல்லது இந்தியா - பாகிஸ்தான் மோதலா???

*இந்திய ஊடகங்களின் நாகரிகமற்ற பண்பு - பாகிஸ்தான் ஒரு ”தபால்கார்” என தொடர் கிண்டல்...

*மேற்கு - ஐரோப்பிய ஊடகங்களின் அமெரிக்க சார்பு

*ஓரளவு ஊடகப் பண்பு கொண்ட அரபு தேசம் 

அமெரிக்க - ஈரான் போர் நிறுத்த முயற்சி மற்றும் சமதான பேச்சில் பாகிஸ்தான் ஈடுபட்டதை, ஒரு சர்வதேச இராஜதந்திர முயற்சியக் கருதாமல் இந்தியா - பாகிஸ்தான் மோதலாக இந்திய ஊடகங்கள் சித்தரித்து வருகின்றமை நாகரிகமற்ற ஊடகப் பண்பாகும்... 

பாகிஸ்தான் சமாதான முயற்சியை, இந்திய மத்திய அரசாங்கம் கடும் பொறாமையுடன் (Jealous) நோக்கியிருந்தது. 

இந்திய ஊடகங்களும் பாகிஸ்தான் மீதான பொறாமையை நாகரிகமற்ற முறையில் வெளிப்படுத்தின. 

இப்போது, பேச்சுவார்த்தை முறிவடைந்த பின்னர், மேற்கு - ஐரோப்பிய ஊடகங்கள் அமெரிக்க சார்பு நிலையிலும், அரபு ஊடகங்கள் ஈரான் நிலைப்பாட்டிலும் செய்தி வெளியிடுகின்றன. 

இருந்தாலும், அவ்வப்போது அமெரிக்க - ஈரான் தரப்பு நியாயங்களை சமநிலையிலும் இந்த ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. 

ஆனால், இந்திய ஊடகங்கள் மாத்திரம், பாகிஸ்தானை குற்றம் சுமத்தி விமர்சிக்கின்றன. 

ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் (Nuclear Enrichment) திட்டத்தை தடுக்க அமெரிக்கா முன்வைத்த "காத்திரமான மற்றும் இறுதியான" (Best and Final) திட்டத்தை ஈரான் ஏற்க மறுத்தமை தோல்விக்குக் காரணம் என சிஎன்என் (CNN) என்ற ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது. 

அரபு ஊடகமான அல் ஜசீரா (aljazeera) அமெரிக்காவின் நிபந்தணைகள் "அளவுக்கு அதிகமானவை" (Excessive) என சுட்டிக்காட்டுகிறது. அத்துடன் அமெரிக்கா ஈரானின் இறைமையை அவமதித்தாகவும். குற்றம் சுமத்தியுள்ளது. 

அதேநேரம் மேற்கு - ஐரோப்பிய ஊடகங்கள், ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களை "தற்பாதுகாப்பு" எனவும், ஈரான் தாக்குதல் நடத்தினால், அதனை பயங்கரவாதம் என்ற தொனியிலும் விமர்சனம் செய்கின்றன. 

அரபு ஊடகங்கள், ஈரான் தரப்பு நியாயத்தை முன்னிலைப்படுத்தினாலும், அமெரிக்க தரப்பின் சில நியாங்களையும் ஓரளவுக்கு முன்வைக்கின்றன.

அதேவேளை, அமெரிக்கா முன்வைத்த "அணு ஆயுத தயாரிப்பை கைவிடுவதற்கான உறுதிமொழி" மற்றும் ஈரான் கோரிய "பொருளாதாரத் தடை நீக்கம்" ஆகிய இரண்டுக்கும் இடையே ஒரு பொதுவான உடன்பாட்டை எட்ட முடியாததே பேச்சுவார்த்தை தோல்விக்குப் பிரதான காரணம் என பாகிஸ்தான் ஊடகமான டவுன் நியூஸ் (Dawn News) சுட்டிக்காட்டியுள்ளது.

இஸ்ரேலின் அதிக தலையீடு மற்றும் அணுசக்தி விவகாரங்களில் அமெரிக்காவும் ஈரானும் பிடிவாதமாக இருந்ததே தோல்விக்குக் காரணம் என பாகிஸ்தானின் எக்ஸ்பிறஸ் நியூஸ் (Express News) ஆய்வு செய்துள்ளது. 

இதேவேளை, பாகிஸ்தான் ஒரு சுயாதீனமான மத்தியஸ்தராக செயல்படவில்லை என்றும், அமெரிக்காவின் "தந்திப் பையன்" (Messenger Boy) எனவும் ரைமஸ் ஒப் இந்தியா Times of India கேலி செய்துள்ளது. 

அமெரிக்கா எழுதிக் கொடுக்கும் "வரைபை" (Draft) தகவல்களை அப்படியே வெளியிடும் ஒரு "தந்திப் பையன்" என்று பெஸ்ற்போஸ்ட் (Firstpost) என்ற இந்திய ஊடகம் நையாண்டி செய்துள்ளது. 

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஒரு நாடு, சர்வதேச அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது முரண்பாடானது என த இந்து (The Hindu) கேலி செய்துள்ளது. 

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) பாகிஸ்தானுக்கு சென்றமை பாதுகாப்பானதா என்ற கேள்வியை ரைமஸஸ் (Times Now) என்ற ஊடகம் குத்திக் காட்டியுள்ளது.

இங்கே, அவதானிக்க வேண்டியது என்னவென்றால்:

ஈரான் ஒரு இறைமையுள்ள நாடு. தனது பாதுகாப்பு - பொருளாதார நலன்களை விட்டுக்கொடுக்காமல் சமாந்தரமான அடிப்படையில் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என ஈரான் விரும்புவது நியாயமானது. 

அதேநேரம், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அணு ஆயுத பரவலைத் தடுப்பது சர்வதேசப் பாதுகாப்பிற்கு அவசியமானது என அமெரிக்கா கருத்துவதும் நியாயமானது. 

ஆகவே, இவற்றை மையப்படுத்தியதாகவே செய்திகளும், செய்தி விமர்சனங்களும் அமைய வேண்டும். 

இந்த இடத்தில், மேற்கு - ஐரோப்பிய மற்றும் அரபு - பாகிஸ்தான் ஊடகங்கள் ஓரளவுக்கு செய்திச் சமநிலையை பின்பற்றியிருந்தன. 

ஆனால், குறிப்பிட்ட சில இந்திய ஊடகங்களைத் தவிர பெருமளவு இந்திய ஊடகங்கள், அந்த சமநிலைப் பண்பை, தத்தமது செய்திகளில் கையாளவேயில்லை...

அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்