முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவிடம் சி.ஐ.டி விசாரணை

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் சி.ஐ.டி விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவிடம்  சி.ஐ.டி விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி  மைத்திரி விக்ரமசிங்கவிடம் இன்று (ஏப்ரல் 24) காலை குற்றப் புலனாய்வுத் துறையினர் (CID)வாக்குமூலம் பதிவு செய்தனர் .

CID அதிகாரிகள் கொழும்பு, 5வது தெருவில் உள்ள  .அவரது வசிப்பிடத்திற்குச் சென்று வாக்குமூலம் பதிவு செய்ததாகவும், பணிகள் நிறைவடைந்த பிற்பகல் அவர்கள் திரும்பிச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இந்த வாக்குமூலம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2023 ஆம் ஆண்டு UK க்கு மேற்கொண்ட பயணம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி, தமது மனைவிக்கு வொல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட கௌரவப் பேராசிரியர் பட்டத்தைப் பெற்றுக்கொள்ள நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற பயணத்திற்கு ரூ. 16.6 மில்லியனுக்கும் அதிகமான அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது .

வொல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகம், குறித்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதியை தாம் அழைத்ததாக CID க்கு மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள்ளது. இந்த பதிலை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்பது தொடர்பாக அட்டார்னி ஜெனரல் திணைக்களத்திற்குள் இரண்டு முரண்பட்ட கருத்துகள் நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன . இதனால் விசாரணையை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

விசாரணையின் ஒட்டுமொத்த முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்வதற்காக, இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 28 ஆம் தேதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது .

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பதும், இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இரண்டாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது