பிறிக்ஸ் - குவாட் மாநாடுகளை நடத்தவுள்ள இந்தியா!
பிறிக்ஸ் - குவாட் மாநாடுகளை நடத்தவுள்ள இந்தியா!
* பிளவுகள் -மோதல்களை அன்று உருவாக்கித் தற்போது, மாற்றியமைக்க முனையும் டில்லி...
* தமிழ்த்தரப்பிடம் உறுதியான பலத்தை எதிர்பார்க்கும் இந்தியா!
* இந்திய நகர்வை சகிப்புடன் ஏற்கும் அமெரிக்கா!
* இலங்கை மூலோபாய நுழைவுவாயில்
இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, விரும்பியோ விரும்பாமலோ, வடக்கு கிழக்கில், தமிழர் பிரதேசங்களுக்கு, நிலையான / மாற்றமடையாத கூடுதல் அதிகாரங்களை / வழங்க, சிங்கள அரசியல் தலைவர்களை வற்புறுத்த வேண்டிய ஒரு கட்டாயச் சூழல், இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை மிகச் சமீபகால அணுகுமுறைகள் காண்பிக்கின்றன.
தமிழ்த் தரப்பு ஒரு பலமான பேரம் பேசும் சக்தியாக இல்லை. கட்சி அரசியலைக் கடந்து தமிழ்த் தரப்பு ஒருங்கிணைவது அவசியம் என்பது, கசப்பான தேவை (Bitter need) என்ற அடிப்படையில் புதுடில்லியின் உணர்வு தற்போது, மாறி வருகிறது போல் தெரிகிறது.
ஈழத்தமிழர் தரப்பு சிதறிக் கிடக்கும் வரை, இந்தியாவுக்கோ அல்லது சர்வதேச நாடுகளுக்கோ அவர்கள் மீது முழுமையான நம்பிக்கை / ஈடுபாடு ஏற்படாது.
"தமிழர்கள் இந்தியாவின் பக்கம் இருப்பார்கள்" என்ற பலமான நம்பிக்கையை தமிழ் தலைமைகள் புதுடில்லிக்கு ஒருமித்த குரலில் வழங்க வேண்டும்.
அரசு அற்ற தேசிய இனம் ஒன்றுடன், மூலோபாய உறவை (Strategic Relationship) ஏற்படுத்திக் கொள்ள விரும்பும் எந்தவொரு வல்லரசும் அந்த இனம் எவ்வளவு தூரம் கட்டுக்கோப்பாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும் என்பதையே முதலில் பரிசோதிக்கும்.
சதிக் கோட்பாடுகளை அக் காலததில், தமிழர் பிரதேசங்களில் கட்டவிழ்த்து விட்டமை கூட ஒரு பரிசோதனையாக இருந்திருக்கலாம்.
ஆனால், அந்தப் பரிசோதனையில் இருந்து மீண்டு, வெளியே வராமல், தற்போதும் அதற்குள் சிக்குண்டுள்ள தமிழ்த் தரப்பின் பிளவுகள்- மோதல்கள், இந்தியாவுக்கு 'நிச்சயமற்ற' சூழலை காட்டுகின்றன.
1987 இல் இருந்த புவிசார் அரசியல் சூழலுக்கு ஏற்ப இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, ஈழத்தமிழர்களின் “சுயநிர்ணய உரிமை“ - ”தமிழர் தாயக கோட்பாடு“ சிதறடிக்கப்பட்டதற்கு, டில்லி தான் காரண- காரியமாக இருந்தது என்ற குற்றச்சாட்டு இல்லாமில்லை.
ஆனாலும் 2009 மே மாதத்திற்குப் பின்னரான, சூழலில் 2001 இல் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவைக கையாளும் உத்தியை கையாளத் தவறியுள்ளது.
மாறாக உள்முரண்பாடுகள் - தனி நபர் மோதல்கள் 2006 ஆண்டிலும் தொடருகின்றன.
இச் சூழலில், இந்தியா ஒரு தீர்வை நோக்கி நகரும் போது "யாரை நம்பிப் பேசுவது?" - "யாரிடம் அதிகாரத்தைப் பெற்றுத் தருவது?" என்ற தயக்கத்தை டில்லிக்கு ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தற்போது ஹார்மூஸ் நீரிணை போல், இந்தியப் பெருங்கடலும் ஒரு போர்க்களமாக மாறும் அபாயம் உள்ளதை அறிந்து, ஈழத்தமிழர் விவகாரத்தை சற்று உயர்த்தி நகர்த்த இந்திய கொள்கை வகுப்பாளர்கள், சற்றுக் கசப்பு உணர்வுடன் முனைகின்றனர் என்பது தெரிகிறது.
ஆகவே, பலமான அரசியல் அச்சு (Political Axis) ஒன்று ஈழத்தமிழ் தரப்பில் உருவானால், இந்தியா தனது நலனுக்காகத் தமிழர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தருவதை முதன்மை நோக்கமாகக் கொள்ள வேண்டிய கட்டாயச் சூழல் எழும்...
அமெரிக்க - ஈரான் மோதல், உலகளாவிய பதற்றங்கள் ஈழத்தமிழர்களுக்கு இச் செய்தியை தருகின்றன.
சமகால சூழலில் இந்தியாவிற்கு வடக்கு கிழக்கில் ஒரு 'நம்பகமான தரப்பு' (Reliable Ally) தேவை.
சர்வதேச நெருக்கடிகள் ஏற்படும் போது, சிறிய இனங்களின் அரசியல் உரிமைகள் குறித்த விடயம் முன்னுக்கு வரும்.
ஆகவே, தற்போதைய ஈரான் போர்ச் சூழல், அமெரிக்க - சீன மோதலும் அத்தகையதொரு "மூலோபாய ஜன்னலை" (Strategic Window) ஈழத்தமிழர்களுக்கு திறந்து விட வாய்ப்புள்ளது.
தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களின் உள்ளக முரண்பாடுகளைத் தவிர்த்து, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுடன் தங்களின் அரசியல் அபிலாஷைகளை (Strategic Alignment) இணைத்துக் கொண்டால், 13 ஆவது திருத்தத்தை கடந்த ஒரு தீர்வை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன.
ஆனால் ”சுயநிர்ணய உரிமை” பற்றி இந்தியா சிந்திக்கும் அளவுக்கு எதிர்பார்க்க முடியுமா என்பது கேள்வி தான். இருந்தாலும் தமிழ்த்தரப்பு ஆற்றலுடன் செயற்பட்டால், இப் பதற்றமான சூழலில் அது பற்றி பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு எழலாம்.
இல்லையேல் 13 தான் இறுதித் தீர்வாகவும் வர வாய்ப்பு உள்ளது.
ஆனால், அந்த 13 ஐ பெறவும் ஒற்றுமை இல்லை என்று தட்டிக் கழித்து இலங்கை அரசின் விருப்பத்துக்கு ஏற்ப டில்லி செயற்படவும் சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆகவே, தற்போது ”பந்து” தமிழ்த்தரப்பின் கைகளில் உ ள்ளது .
வல்லரசு போட்டியைத் தமிழர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தவறியுள்ளனர் என்ற விமர்சனங்கள் சர்வதேச அளவில் தற்போது எழுகின்றன.
அதேநேரம், இந்தியா, தனது இராஜதந்திர நகர்வுகளின் ஒரு பகுதியாக, இந்த மே மாதத்தில் பிறிக்ஸ் (BRICS) - குவாட் (Quad) ஆகிய இரு முக்கிய சர்வதேச அமைப்புகளின் கூட்டங்களை நடத்தவுள்ளது.
இலங்கைத்தீவை மையப்படுத்திய இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில், சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு கூட்டணி தான் இந்த குவாட் அமைப்பு
அமெரிக்கா, இந்தியா. அவுஸ்ரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.
ஆனால், சீனா - ரசியா ஆகிய நாடுகளை மையப்படுத்தி அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் அதிகளவில் அங்கம் வகிக்கும் அமைப்பு தான், இந்த பிறிக்ஸ்.
ஆகவே, வெவ்வேறு துருவம் கொண்ட இந்த இரண்டு அமைப்புகளின் கூட்டங்களை நடத்துவதன் ஊடாக தற்போதைய உலக அரசியல் குழப்பங்கள் மத்தியில் தன்னை நிலை நிறுத்த இந்தியா முனைகிறது.
பிறிக்ஸ் ஒரு சிக்கல் அடிப்படையிலான சீரமைப்பு எனவும், (Issue-based Alignment) பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் (Global South) குரலாகவும் இந்தியா நோக்குகிறது.
அதேசமயம், குவாட் அமைப்பை பாதுகாப்பு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான ஒரு தளமாகப் பயன்படுத்துகிறது.
எதிர்வரும், 14-15 ஆம் திகதிகளில் புதுடில்லியில் பிறிக்ஸ் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. குவாட் கூட்டம் மாத இறுதியில் நடைபெறவுள்ளது.
பிறிக்ஸ் என்ற வார்த்தைக்கு பதிலாக, ஒத்துழைப்பு - நிலைத் தன்மைக்கான தாங்குதிறன் மற்றும் புத்தாக்கத்தை உருவாக்குதல் (Building Resilience and Innovation for Cooperation and Sustainability) என்ற புதிய விளக்கத்தை அளித்து, பிறிக்ஸை ஒரு வளர்ச்சி சார்ந்த அமைப்பாக மாற்ற இந்தியா முயல்கிறது.
இந்த ஆண்டு பிறிக்ஸ் கட்டமைப்பின் தலைமை பொறுப்பை மோடி ஏற்கவுள்ள நிலையில், பிறிக்ஸின் இலக்கு மாறாமல், பொருள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
18 ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு செப்டம்பர் 12/ 13 ஆகிய திகளில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
மே மாதத்தில் ரசிய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் பங்கேற்கும் பிறிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தையும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பங்கேற்கும் குவாட் கூட்டத்தையும் இந்தியா நடத்துகிறது.
இதனை சமநிலைப்படுத்தும் இராஜதந்திரம் (Balancing Act) என டில்லி ஆங்கில ஊடகங்கள் வர்ணிக்கின்றன.
ஆனால், இந்தியாவின் இந்த இரண்டு வகையான உத்தி என்பதை அமெரிக்கா "சகிப்புத்தன்மை கலந்த ஏற்புடன்" (Strategic Tolerance) நோக்குகிறது எனலாம்.
ஏனெனில், சீனாவுக்கு எதிரான இந்தோ-பசிபிக் வியூகத்தில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத பங்குதாரர் என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது.
எனவே, ரசியாவுடன் இந்தியா கொண்டுள்ள உறவை அமெரிக்கா விரும்பவில்லை என்றாலும், இந்தியாவின் தன்னாட்சி முடிவுகளை (Strategic Autonomy) அது ஏற்றுக் கொள்கிறது.
எனினும், பிறிக்ஸ் அமைப்பில் “டொலருக்கு எதிரான" (De-dollarization) நடவடிக்கைகள் எடுப்பதை டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எதிர்த்துள்ளார்.
இவ்வாறு செய்யும் நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்தியா டொலரை முழுமையாகக் கைவிடாமல், தனது வர்த்தக நலன்களுக்காக மட்டும் ரூபாய் வர்த்தகத்தை ஊக்குவிப்பதால் அமெரிக்கா இதனை ஒரு வரம்பிற்குள் அனுமதிக்கிறது.
இதனை "யதார்த்தவாத" (Realism) கொள்கை என்று இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர்.
சர்வதேச அரசியலில் எந்த நாடும் நிரந்தர நண்பன் அல்லது எதிரி அல்ல தேசிய நலன் மாத்திரமே முதன்மை பெறும்.
இந்தியா தனது எரிசக்தி தேவைக்காக ரசியாவையும், பாதுகாப்புத் தேவைக்காக அமெரிக்காவையும் சார்ந்து இருப்பது இந்தியாவின் தேசிய நலன் சார்ந்த முடிவு.
பழைய அரசியல் விஞ்ஞானக் கோட்பாடுகள் நாடுகளை ஏதோ ஒரு அணியில் இருக்கச் சொல்லும் (Bipolarity).
ஆனால், இன்றைய உலகம் பன்முகத்தன்மை (Multipolarity). கொண்டது இதில் ஒரு நாடு பல அணிகளுடன் இணைந்து செயல்படுவது அதன் பலத்தையே குறிக்கிறது.
வியூகத் தன்னாட்சி (Strategic Autonomy) ஒரு பெரிய நாடு மற்றொரு வல்லரசின் நிழலில் இருக்க விரும்பாமல், தனது சொந்த வெளியுறவுக் கொள்கையை வகுப்பது அரசியல் விஞ்ஞான ரீதியாக ஒரு வலிமையான இறையாண்மை கொண்ட நாட்டின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
நவீன காலத்தின் சவால்களை எதிர்கொள்ள இந்தியா வகுத்துள்ள ஒரு மூலோபாய ஆயுதம் என்று டில்லி ஆங்கில ஊடக விமர்சகர்கள் கற்பிதம் செய்கின்றனர்.
அதேநேரம், அமெரிக்க - இந்திய அரசுகள், இலங்கை இந்தோ - பசுபிக் பிராந்தியத்தின் ஒரு "மூலோபாய நுழைவுவாயில்" (Strategic Gateway) என்றே கருதுகின்றன.
ஏனெனில், உலக வர்த்தகத்தின் பெரும்பகுதி இலங்கைக்கு மிக அருகில் உள்ள கடல் பாதை வழியாகவே நடைபெறுகிறது.
சீனக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இலங்கையின் ஒத்துழைப்பு குவாட் நாடுகளுக்குத் தேவை.
இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் இலங்கை இருப்பதால், அங்கு ராடர் அமைப்புகள் அல்லது கண்காணிப்பு வசதிகளை ஏற்படுத்துதல் குவாட் நாடுகளின் பாதுகாப்பு வியூகத்திற்கு உதவும்.
ஆகவே, இந்த இடத்திலேதான் அநுர அரசாங்கம் கடும் அழுத்தங்களை எதிர்கொண்டு, சில நாட்களுக்கு முன்னர், இந்திய பிடியில் சிக்கியுள்ளதை அறிய முடிகிறது.
இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கை சீனாவின் பக்கம் முழுமையாகச் சென்றால், அது இலங்கையின் உள்நாட்டு நிலைத் தன்மையைப் பாதிக்கும் என்பதை இலங்கை தற்போது உணர்ந்துள்ளது.
அதேசமயம், சீனாவை முற்றாக பகைத்துக் கொள்ளவும் இலங்கை விரும்பாது.
சுருக்கமாச் சொன்னால், இந்தியா தனது பொருளாதார பலத்தால் உலக அரங்கில் "பேரம் பேசும்" (Bargaining power) நிலையில் உள்ளது.
ஆனால், இலங்கை ஒரு சிறிய தீவு நாடு என்பதால், அது தனது பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் இந்தியாவின் ஆதரவை அதிகம் நம்பியுள்ளது.
இப் பின்புலத்தில் ஈழத்தமிழ் தரப்பு சிந்திக்க வேண்டியது என்ன?
அ.நிக்ஸன்-பத்திரிகையாளர்
Editor