கரூர் விபத்து விவகாரம்: செந்தில் பாலாஜியிடம் சிபிஐ தீவிர விசாரணை
செந்தில் பாலாஜியிடம் சிபிஐ தீவிர விசாரணை
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜயின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். சிபிஐயின் விசாரணைக்கு பிறகு சென்னை திரும்பிய அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, டெல்லியில் நேற்று நடைபெற்ற விசாரணை குறித்த விவரங்களை வெளியிட்டார். "காலை 10.15 மணிக்கு சிபிஐ அலுவலகத்தை சென்றடைந்தேன். பத்தரை மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 5 மணி வரை நீடித்தது. கரூரில் நடந்த சோகமான சம்பவம் குறித்து என்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் உரிய பதில்களை அளித்துள்ளேன்" என்று தெரிவித்தார் . விசாரணையில் எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டன என்பது குறித்து தமக்கு சரியாக நினைவில்லை என்றும் அவர் கூறினார் .
சிபிஐ விசாரணையின் போது, தவெக தலைவர் விஜய், அக்கட்சியின் நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்னதாக பதிவு செய்த வாக்குமூலங்களில் தெரிவித்த குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேகங்கள் குறித்து செந்தில் பாலாஜியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
கடந்த நவம்பர் மாதம் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. சிபிஐ அதிகாரிகளிடம் வீடியோ ஆதாரங்கள் மற்றும் பிற ஆவணங்களை ஒப்படைத்துள்ளோம். சதி ஏதும் நடந்திருக்கிறதா என்ற சந்தேகத்தை அதிகாரிகள் முன் வைத்துள்ளோம்" என்று தெரிவித்திருந்தார் .
சிபிஐ அதிகாரிகள் மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர் நிகழ்ச்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நேரத்திற்கும், விஜய் வருகை தந்த உண்மையான நேரத்திற்கும் இடையே ஏழு மணி நேரம் இடைவெளி இருந்தது. இந்த தாமதமே கூட்டம் அதிகரிக்க காரணமாக இருந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடக்கத்தில் 10,000 பேர் வருவார்கள் என மதிப்பிடப்பட்ட நிலையில், நேரப்போக்கில் கூட்டம் சுமார் 30,000 பேராக அதிகரித்தது. இது கட்டுப்பாட்டை இழக்க வழிவகுத்ததா என்பது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கரூர் நிகழ்ச்சியை யார் ஒருங்கிணைத்தார்கள், அனுமதிகள் பெறுவதில் உரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டதா, காவல்துறையினருடன் போதிய ஒருங்கிணைப்பு இருந்ததா உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
அரசியல் அழுத்தமா? - செந்தில் பாலாஜி விளக்கம்:
டெல்லிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டது அரசியல் அழுத்தமாக இருக்குமோ என்ற கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, "நான் அப்படி கருதவில்லை. சில சந்தேகங்கள் இருந்திருக்கலாம். நிகழ்வின் போது நான் களத்தில் இருந்த பொறுப்பான நபர் என்பதால், சிபிஐ அதிகாரிகள் என்னிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். ஒரு பொறுப்பான நபராக அதற்கு பதிலளித்துள்ளேன்" என்று கூறினார் . மேலும், "விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளையும், நான் அளித்த பதில்களையும் பொதுவெளியில் வெளிப்படுத்துவது பொருந்தாது" என்றும் அவர் தெரிவித்தார் .
விசாரணைக்கு முந்தைய நிலவரம்:
செந்தில் பாலாஜிக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியபோது, அவர் அதைப் பெறாமல் தவிர்த்ததாக கூறப்படுகிறது. முதலில் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட நோட்டீஸை அவரது குடும்பத்தினர் பெற மறுத்துவிட்டதாகவும், பின்னர் மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் பதிலளிக்காததால், மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன . இந்த வழக்கில் ஏற்கனவே விஜய், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பலர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர் . குறிப்பாக, விஜய் கடந்த மார்ச் 15-ம் தேதி சிபிஐ முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் .
தமிழக சட்டமன்ற தேர்தல் பின்னணி:
இந்த விசாரணை நடைபெற்றுள்ள நேரத்தில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தல் பணிகள் குறித்து கேட்டபோது, "திமுகவின் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மக்கள் திமுகவுக்கே வாக்களிக்க தயாராக உள்ளனர்" என்று செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்தார் .
Editor