எரிபொருள் விலை உயர்வு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம விளக்கம்
எரிபொருள் விலை உயர்வு
நாட்டில் அண்மையில் அமுல்படுத்தப்பட்ட எரிபொருள் விலை உயர்வு, திடீர் முடிவல்ல; மாறாக நிலவும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட அவசியமான நடவடிக்கை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம தெரிவித்தார்.
மார்ச் மாத தொடக்கத்தில் ஏற்பட்ட அசாதாரண எரிபொருள் நுகர்வு அதிகரிப்பே விலை சரிசெய்தலுக்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டினார். சாதாரணமாக 4,000 மெட்ரிக் தொன்களாக உள்ள தினசரி டீசல் நுகர்வு, மார்ச் 2 ஆம் திகதி 10,321 மெட்ரிக் தொன்களாக உயர்ந்துள்ளது. பொதுமக்களின் பீதி கொள்முதல் மற்றும் பதுக்கல் காரணமாக 9 நாட்களுக்கான மொத்த எதிர்பார்ப்பு நுகர்வு 36,000 இல் இருந்து 65,000 மெட்ரிக் தொன்களாக உயர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும் விலை திருத்தத்திற்கு வழிவகுத்தது. பெப்ரவரி 23 அன்று 72 டொலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, மார்ச் 9 அன்று 119 டொலராக அதிகரித்தது. இதனால் உலக சந்தையில் டீசல் விலை 99 சதவீதமும், ஒக்டேன் 92 பெட்ரோல் விலை 175 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் மீண்டும் நெடுஞ்சாலைகளில் வரிசை நிற்கும் நிலை ஏற்படுவதை தவிர்க்கவே விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். விலை உயர்த்தப்படாவிட்டால் தனியார் இறக்குமதி நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்தி இருக்கும் என அவர் எச்சரித்தார். இலங்கை மட்டுமல்ல, சவூதி அரேபியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் தற்போதைய சூழ்நிலையில் விலைகளை உயர்த்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்கால எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்தல், விநியோக தொடர்ச்சியை உறுதி செய்தல் ஆகியவற்றையே அரசாங்கம் முதன்மை நோக்கமாக கொண்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
Editor