“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – அல்லைப்பிட்டி படுகொலை நினைவு நிகழ்வு உணர்வுடன்”
“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – அல்லைப்பிட்டி படுகொலை நினைவு நிகழ்வு உணர்வுடன்”
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் 17ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் இரண்டாவது நாள் இன்று (13) யாழ் தீவகப் பகுதியான அல்லைப்பிட்டியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதனுடன், 2006ஆம் ஆண்டு அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவு நாளும் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.
தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக அல்லைப்பிட்டி பங்குத்தந்தையால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், அல்லைப்பிட்டி சேமக்காலையில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் உறவினர்களால் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
2006ஆம் ஆண்டு அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவுகளை உறவினர்கள் இதன்போது பகிர்ந்து கொண்டனர்.
இறுதி யுத்தத்தின் போது மக்கள் எதிர்கொண்ட சொல்லொணாத் துயரங்களையும் பட்டினியையும் நினைவுகூரும் வகையில், ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ காய்ச்சப்பட்டு சிரட்டைகளில் வழங்கப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அந்தக் கஞ்சியைப் பருகி, வரலாற்றின் அவலமான தருணங்களை மனதில் நினைவுகூர்ந்தனர்.
இந்நிகழ்வில் அல்லைப்பிட்டி படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், தீவகம் நினைவேந்தல் குழுவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஒருவர்,
“இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் கஞ்சியைக் குடித்தே வாழ்ந்தார்கள். அவர்களின் துயரங்களையும் உணர்வுபூர்வமான வாழ்வையும் இன்று நினைத்துப் பார்க்கையில் மிகுந்த கவலையாக உள்ளது,” எனத் தெரிவித்தார்.
Editor