எரிபொருள் உதவி கோருகின்ற அண்டை நாடுகள்: இந்தியா என்ன முடிவெடுக்கும்?
எரிபொருள் உதவி கோருகின்ற அண்டை நாடுகள்
எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அண்டை நாடுகளான இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகியவை இந்தியாவிடம் உதவி கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மூன்று நாடுகளும் தங்களது எரிபொருள் தேவைக்காக இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தக் கோரிக்கைகள் குறித்து இந்திய அரசு தற்போது பரிசீலித்து வருவதாகக் கூறினார். "சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாகும். குறிப்பாக, அண்டை நாடுகளுக்குத் தேவையான எரிபொருட்களை வழங்குவதில் நாங்கள் முக்கிய பங்கு வகிக்கிறோம்" என்று அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்களுக்கு அண்டை நாடுகளின் உதவியை நாடி வருகிறது. இந்நிலையில், இந்தியா அளிக்கும் பதில், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் இரு நாட்டு உறவுகளில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.