இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் புதிய கூட்டு முயற்சி கட்டமைப்பு ஆரம்பம்
இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் புதிய கூட்டு முயற்சி
இலங்கையின் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்துவதற்கும், திட்டமிட்ட காலப்பகுதியில் 7% பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கும் உதவும் வகையில், உலக வங்கியும் இலங்கை அரசாங்கமும் இணைந்து ‘இலங்கை கூட்டு முயற்சி கட்டமைப்பை’ நேற்று (02) தொடங்கி வைத்தன.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, “பொருளாதார நிலைத்தன்மை மற்றும் நல்லாட்சிக் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டை நிலையான வளர்ச்சியில் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம்” என்று தெரிவித்தார்.
இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், தனியார் துறையை மையப்படுத்திய வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிப்பதும், வலுவான மற்றும் நிலையான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதுமாகும். உலக வங்கியுடனான பல தசாப்த கால ஒத்துழைப்பு இந்தப் பயணத்தை வலுப்படுத்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்தப் புதிய கூட்டமைப்பின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனம் (IFC) ஊடாக 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் நேரடி முதலீடும், உலக வங்கி ஊடாக 1 பில்லியன் அமெரிக்க டொலர் சலுகை நிதியுதவி வசதிகளும் வழங்கப்படவுள்ளன.
மேலும், தனியார் துறையில் புத்தாக்கம் மற்றும் போட்டித்தன்மையை ஊக்குவிப்பதன் மூலம், அடுத்த தசாப்தத்தில் வேலைச் சந்தையில் நுழையவிருக்கும் ஒரு மில்லியன் இளம் இலங்கையர்களுக்குத் தரமான வேலைவாய்ப்புகளை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
Editor