ரஷ்யா உக்ரைன் தலைநகா் கீவ் மீது குண்டுவீச்சு: 4 ஆண்டுகளாக முடிவுறாத சண்டை!
Russia Bombs Ukraine's Capital Kiev
உக்ரைன் மீதான படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவு தினத்தன்று (பிப்ரவரி 22) அதிகாலையில், தலைநகர் கீவ் நகரை ரஷ்யா கடுமையாக தாக்கியது. பாலிஸ்டிக் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், நகரில் வெடி விபத்துகள் ஏற்பட்டதாகவும், குடியிருப்புகள் தீப்பிடித்து எரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் கீவ் நகரில் தொடர்ச்சியான வெடிகுண்டு வெடிப்புச் சப்தங்களைக் கேட்டதாகத் தெரிவித்தனர். இதற்கு சற்று முன்னதாக, நகரம் முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி ஒலித்தது. உடனடியாக, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
"பாலிஸ்டிக் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி எதிரி தலைநகரைத் தாக்குகிறது," என்று கீவ் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் தைமூர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை அடுத்து, உக்ரைன் முழுவதற்குமான வான்வழித் தாக்குதல் எச்சரிக்கையை அந்நாட்டு வான்படை பிறப்பித்தது.
போர் நிலவரம் மற்றும் பேச்சுவார்த்தை தோல்வி:
சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன், 2022 பிப்ரவரி 22 அன்றுதான் உக்ரைன் மீது ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கியது. அன்று முதல் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நீடித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் தாக்குதல் நடத்தும் போக்கை ரஷ்யா அதிகரித்துள்ளதாக கவனிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது உக்ரைனில் பலத்த குளிர் நிலவுகிறது; வெப்பநிலை -10 டிகிரி செல்சியஸாக உள்ளது. இந்த சூழ்நிலையில், ராணுவத் தளங்களையே ரஷ்யா முதன்மை இலக்காகக் கொண்டு தாக்கி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதுவரையிலான போரில் உக்ரைனின் ஐந்து பிராந்தியங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும், எந்தவொரு உடன்பாட்டையும் எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.