தமிழக சட்டமன்ற தேர்தல் தவெக 'தனித்துப் போட்டி

தவெக 'தனித்துப் போட்டி

தமிழக சட்டமன்ற தேர்தல்  தவெக 'தனித்துப் போட்டி

தமிழக சட்டமன்ற தேர்தலில்  தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 'தனித்துப் போட்டி' அறிவிப்பு, தமிழக அரசியலில் நான்கு முனைப் போட்டியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பாஜக மேலிடம், குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுகவை தமிழகத்தில் வீழ்த்த விஜய்யின் வாக்கு வங்கி அவசியம் என பாஜக கருதுவதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலமாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையில், விஜய் தரப்பு வைத்த  நிபந்தனைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. "90 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்; இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும்" என்ற கடுமையான நிபந்தனைகளை விஜய் தரப்பு முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிபந்தனைகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்துவிட்டதாகவும், இதனால் கூட்டணிப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் முடிந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், கட்சிக்குள் பொதுச் செயலாளர்களான புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கு இடையே அதிகாரப் போட்டி நிலவி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சமீபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், "என்ன நடந்தாலும் வரும் தேர்தலில் நாம் தனித்துத்தான் போட்டியிடுகிறோம்" என விஜய் தெளிவாக அறிவித்துள்ளார். மேலும், மோதலில் இருந்த நிர்வாகிகளைச் சமாதானப்படுத்தி, தேர்தல் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.

எனினும், தொடர்ச்சியாக பாஜக தரப்பில் கூட்டணிக்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. விஜய்யின் இந்த தனித்துப் போட்டி அறிவிப்பும், பின்னணியில் நடக்கும் கூட்டணி முயற்சிகளும், வரும் சட்டமன்றத் தேர்தலை மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.