அமெரிக்க வாஷிங்டன் மேயர் பதவிக்கு தமிழகப் பெண் ரினி சம்பத் போட்டி

வாஷிங்டன் மேயர் பதவிக்கு தமிழகப் பெண் ரினி சம்பத் போட்டி

அமெரிக்க வாஷிங்டன் மேயர் பதவிக்கு தமிழகப் பெண் ரினி சம்பத்   போட்டி

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டி.சி. (கொலம்பியா மாவட்டம்) மேயர் பதவிக்கான ஜனநாயகக் கட்சியின் உள் தேர்தல் (பிரைமரி) உள்கட்சித் தேர்தல் ஜூன் 16 நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இளம் பெண் ஒருவர் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளார். வாஷிங்டன் டி.சி. வரலாற்றில் மேயர் பதவிக்கான வாக்குச்சீட்டில் இடம்பிடித்த முதல் தெற்காசிய வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ரினி சம்பத் (31).

தேனி மாவட்டத்தில் பிறந்த ரினி சம்பத், தனது 7-வது வயதில் பெற்றோருடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். தற்போது வாஷிங்டனில் வசித்து வரும் இவர், அரசு ஒப்பந்ததாரராகப் பணியாற்றுகிறார். எந்தவொரு அரசியல் பின்னணியும் இல்லாத இவர், ‘அடிப்படை வசதிகளை மேம்படுத்துவோன்’ என்ற முழக்கத்துடன் போட்டியில் குதித்துள்ளார்.

தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் ரினி சம்பத் கூறியிருப்பதாவது:“நான் அரசியல்வாதி அல்ல. யாருக்கும் நான் கடமைப்பட்டவள் இல்லை. ஒருபோதும் ஒருபக்கச் சார்பு என்பது என்னிடம் இருக்காது. நகரத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் மட்டுமே முழு நேரமும் கவனம் செலுத்துவேன். வெற்றி நமக்குப் பிரகாசமாக உள்ளது. வெறும் நான்கு வாரங்களில் வாஷிங்டன் டி.சி. வரலாற்றில் மேயர் பதவிக்கான வாக்குச்சீட்டில் இடம்பிடித்த முதல் தெற்காசிய வேட்பாளர் என்ற பெருமையை நான் பெற்றுள்ளேன்.”

தனது முன்னுரிமைகள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:“வாஷிங்டன் டி.சி.யின் மேயராக, நமது நகரம் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதை உறுதி செய்வதே எனது முன்னுரிமையாக இருக்கும். சாலைகளில் உள்ள மேடுபள்ளங்கள் சரி செய்யப்படும். பொட்டோமாக் ஆற்றில் பேரழிவை ஏற்படுத்தும் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். சிக்கனமான எனது பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது” என்றார்.

வாஷிங்டன் டி.சி.யில் ஜனநாயகக் கட்சியினரே பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். 1975-ம் ஆண்டு முதல் மேயர் தேர்தல் நடைபெற்றதிலிருந்து, இதுவரை குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எவரும் மேயராக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் பிரைமரியில் ரினி சம்பத் போட்டியிடுவது வாஷிங்டன் தெற்காசிய சமூகத்தில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.