மட்டக்களப்பில் தமிழர்களின் உழைப்பை சுரண்டும் முதலாளி வர்க்கம்! அபிவிருத்தியிலும் பாரபட்சம் - செ.நிலாந்தன்

மட்டக்களப்பில் தமிழர்களின் உழைப்பை சுரண்டும் முதலாளி வர்க்கம்!

மட்டக்களப்பில் தமிழர்களின் உழைப்பை சுரண்டும் முதலாளி வர்க்கம்! அபிவிருத்தியிலும் பாரபட்சம் - செ.நிலாந்தன்

தமிழர்களின் உழைப்பில் வாழும் அதிகார வர்க்கம் அவர்களுக்கான அபிவிருத்தியில் தொடர்ந்து பாரபட்சம் காட்டுகிறது என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் தெரிவித்தார்.

தொழிலாளர் தினமான மே தினத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் 

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயம் முதல் கொண்டு முடி திருத்துவது வரை அனைத்திலும் தமிழர்களின் உழைப்பே மூலதனமா உள்ளது.

ஆனால் அபிவிருத்தியில் மட்டும் தமிழ் பிரதேசங்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வருகிறது. 

 நெல் உற்பத்தி முதல் கொண்டு பால், மீன், மண் , கல் என அனைத்து மூலதன உற்பத்திகளையும் தங்களது ஊழைப்பால் உருவாக்கும் தமிழ் சமூகம் கடனில் வாழும் போது அவர்களது வரிப் பணத்தில் வாழும் அரசாங்கம் முதல் கொண்டு தனியார் கம்பெனிகள் வரை இந்த உழைப்பை வைத்து மிகப் பெரிய இலாபம் அடைகின்றனர்.

ஆனால் தங்களது உழைப்பை மூலதனமாக செலுத்திய தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள், சுகாதார சேவைகள், கல்வி என்பன போதுமானதாக இல்லை அவர்களின் பிரதேசங்கள் அனைத்து அபிவிருத்தி முதல் கொண்டு அனைத்திலும் புறக்கணிக்கப்பட்டே வருகிறது. 

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில், விவசாயம், மீன் பிடி, கால்நடை வளர்ப்பு, தோட்டப் பயிர் செய்கை, உட்பட முடி திருத்துவது முதல் கொண்டு துணி அயன் செய்வது வரை தமிழர்கள் தங்களது உழைப்பை மூலதனமாக செலுத்துகின்றனர். 

அதிலும் படுவான்கரை பகுதிகளில் உள்ள விவசாயிகள், சிறுதோட்ட தொழிலாளிகள், மீனவர்கள் வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். ஆனால் அவர்களின் உழைப்பை அதிகமாக பயன்படுத்தி இலாபம் ஈட்டும் முதலாளிகள் வாழு பிரதேசங்களே அதிகமாக அபிவிருத்தி செய்யப்பட்டு பெரு நகரங்களாக காட்சியளிக்கிறது.

அரசாங்கம் சொன்ன மாற்றம் இன்னும் தமிழர்கள் வாழும் கிராமப் புறங்களுக்கு சென்றடையவில்லை.

இந்த நிலை மாறாத வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் சமூக பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் உற்பத்திக்கு ஏற்றால் போல் உரிய விலை நிர்ணயம் இல்லை, நெல் கொள்வனவு விலை உட்பட அனைத்தையும்தனியார் முதலாளிகள் தீர்மானிக்கின்றனர். முறையான நெல் களஞ்சிய சாலைகள் இல்லை, தமிழர்களிடம் பொதிய அரிசி ஆலைகள் இல்லை இதனால் தமிழர்களின் உற்பத்தி பொருளாதாரம் தனியார் முதலாளிகளாளும், தனியார் கம்பனிகளாலும் சுரண்டப்பட்டு வருகின்றது.

 என்னதான் நெல்லை தமிழர்கள் உற்பத்தி செய்தாலும் அரிசியை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலையில் தான் மக்கள் உள்ளனர்.

 அரசாங்கம் உற்பத்தி பொருளாதாரவாய்ப்புகளை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கின்றது. 

மீன் பிடி தொழில், கால்நடை வளர்ப்பு, சிறு தோட்ட தொழில்கள் என அனைத்திலும் இதே நிலைதான் காணப்படுகிறது. 

உழைக்கும் மக்களின் பொருளாதாரத்தை, வளங்களை சுரண்டுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க கூடாது. 

தமிழ் மக்கள் சமூக ரீதியாக வலுவான கட்டமைப்புகளை உருவாக்கி தங்களது உழைப்பை தங்களது சமூகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். 

தமிழ் மக்களின் உற்பத்தி பொருளாதாரம் வேறுமனே மூலப் பொருட்களை மாத்திரம் உற்பத்தி செய்வதுடன் நின்று விடாமல் முடிவு பொருட்களை உற்பத்தி செய்து அதனை சந்தைப் படுத்தும் அளவுக்கு வளர்ச்சி அடைய வேண்டும். இதற்காக நாம் வேறுமனே அரசாங்கத்தை மாத்திரம் நம்பியிருக்க முடியாது வெளிநாட்டில் உள்ள எமது புலம்பெயர் தமிழர்களும் கை கோர்க்க வேண்டும். அப்போதுதான் ஒரு சிறந்த பொருளாதார சமூகத்தை நாம் வளர்த்தெடுக்க முடியும். 

இன்று நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சிறுக சிறுக சேமித்து வைத்த திறைசேரி நிதியில் இருந்து 2.5 மில்லியன் டாலர் களவாடப்படுகிறது என்றால். கடந்த காலம் போல் இந்த அரசிலும் நாட்டின் வரிப் பணம் கொள்ளையடிக்கப்படுகின்றதா? என்ற கேள்வி எழுகிறது. 

மக்கள் பணம் எந்த வடிவத்தில் கொள்ளையடிக்கப்பட்டால்ம் அதில் அதிகபட்சமாக பாதிக்கப்படுவது நாட்டில் உள்ள தொழிலாளிகளின் குடும்பங்களே. 

ஏற்கனவே அதிகரித்த பொருளாதார சுமையில் வாழும் இந்த நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தை மீட்டெடுக்க வேண்டியது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.