அமெரிக்கா–ஈரான்–இஸ்ரேல் பதற்றம் : சர்வதேச சமூகம் கவலை
அமெரிக்கா–ஈரான்–இஸ்ரேல் பதற்றம்
அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கு எதிராக ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், ஈரானை “பூமியில் இருந்து முற்றிலும் அழித்துவிடுவோம்” என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணைச் சந்தி பகுதியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கடும் இராணுவ பதற்ற சூழ்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் எந்தவித அவசர நிலைக்கும் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க நடவடிக்கைகள் குறித்து ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித் பேட்டியில், ஈரானிய துறைமுகங்களைத் தடுப்பதற்கான அமெரிக்கத் திட்டத்தை எதிர்கொள்வதில் ஈரான் ஓரளவு நெகிழ்வுத்தன்மையைக் காட்டுகிறது, ஆனால் அது அமெரிக்கச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்று ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.
அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் கூறுகையில், ஈரானின் 6 சிறிய கடற்படை கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் (இயக்குநர் இல்லா விமானங்கள்) தகர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா இந்த பிராந்தியத்திற்கு கூடுதல் படைகள் மற்றும் நவீன ஆயுதங்களை அனுப்பி வருகிறது.
இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான் அரச ஊடகம் அதனை மறுத்துள்ளது.
மேலும், லெபனானின் தெற்கு பகுதிகளில் ஹெஸ்பொல்லா இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் கத்தோலிக்க தேவாலயக் கட்டிடம் சேதமடைந்ததாக லெபனான் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த பதற்ற நிலை உலக பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. (பிரெண்ட் கச்சா எண்ணெய்) விலை 5% அதிகரித்து, ஒரு பேரலுக்கு 113.78 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் இஸ்ரேல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் எட்டப்படும் வரை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்திக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உலகின் பல பகுதிகளில் யூத விரோத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. நியூயார்க் மற்றும் லண்டன் போன்ற நகரங்களில் யூத வழிபாட்டு தலங்களை குறிவைத்து பல குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன.
இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என சர்வதேச சமூகம் கவலை வெளியிட்டு, உடனடி இராஜதந்திர தீர்வை நோக்கி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
Editor