அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை: டிரம்ப் கூற்றை ஈரான் மறுக்கிறது

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை: ஈரான் மறுக்கிறது

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை: டிரம்ப் கூற்றை ஈரான் மறுக்கிறது

 அமெரிக்காவுடன் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய நிலையில், அதனை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மறைமுக பேச்சுவார்த்தைகள் கூட எதுவும் நடைபெறவில்லை என ஈரான் வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அதிகாரிகள் மூலம் ஈரானிடம் 15-அம்ச திட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை முற்றாகக் கைவிடுதல், யுரேனியம் கையிருப்பை ஒப்படைத்தல், ஏவுகணைத் திட்டத்தில் கட்டுப்பாடுகள் விதித்தல், ஹோர்மூஸ் நீரிணையை சர்வதேச கப்பல் போக்குவரத்துக்குத் திறந்து வைத்தல் ஆகிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தைக்கு ஈரான் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மூடப்பட வேண்டும், தாக்குதல்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், ஹோர்மூஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.

மார்ச் 21 அன்று, ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் குறிவைக்கப்படும் என்று 48 மணி நேர காலக்கெடு விதித்திருந்த டிரம்ப், மார்ச் 23 அன்று “பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு” தாக்குதலை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இதற்குப் பதிலளித்த ஈரானிய இராணுவ கட்டளை மையமான காத்ம்-உல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர், “பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவின் மீது ஈரானுக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது” என்று கூறினார். கர்னல் இப்ராஹிம் சோல்ஃபகாரி, “பாரசீக வளைகுடாவின் பாதுகாப்பு அமைப்பில் தலையிட இப்பகுதிக்கு வெளியே உள்ள நாடுகளுக்கு உரிமை இல்லை” என்று தெரிவித்தார்.

மார்ச் 23 இரவு, “குழந்தைகளைக் கொல்லும் தாக்குதல் நடத்துபவர்களை” எதிர்கொள்வதற்கு இதுவே சரியான வழி என்று கூறி, தனது சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்லாமிய புரட்சிகர காவல்படை நியாயப்படுத்தியது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். எகிப்து, சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ரியாத்தில் சந்தித்து மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எகிப்திய உளவுத்துறை ஈரானிய புரட்சிகர காவல்படைத் தலைவர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நிலையில், அமெரிக்காவின் திட்டம் ஈரானிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன.