அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் கூற்று மீது ஈரான் மறுப்பு

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் கூற்று மீது ஈரான் மறுப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ள நிலையில், எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 28 முதல் போர் நிலை நீடித்து வருகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், "கடந்த இரு நாட்களாக அமெரிக்கா, ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்திருக்கிறது. மத்திய கிழக்கின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். ஒரு வாரம் வரை பேச்சுவார்த்தை நீடிக்கக்கூடும்" என்று கூறியுள்ளார்.

இருப்பினும், ஈரான் தரப்பில் இருந்து இந்தக் கூற்று மறுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பேச்சுவார்த்தையும் அமெரிக்காவுடன் நடைபெறவில்லை என்று ஈரான் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கும் ஈரான் ராணுவத்துக்கும் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த மோதலின் எதிர்விளைவாக, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கச்சா எண்ணெய் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முடக்கியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டுமென ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளின் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களை தகர்ப்போம் என்று ஈரான் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க அளவில், வளைகுடா நாடுகளின் குடிநீர் தேவையில் 90% கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. அவற்றை ஏவுகணைகள் மூலம் தகர்ப்போம் என்று ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் மேலும் தெரிவிக்கையில், "ஈரான் பிரதிநிதிகளை நான் தொடர்பு கொள்ளவில்லை. அவர்களே பேச்சுவார்த்தைக்கு முன்வந்தனர். பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண அவர்கள் விரும்புகின்றனர். நாங்களும் சுமுக தீர்வை எட்ட விரும்புகிறோம்" என்றார்.

மேலும், "ஈரானை சேர்ந்த சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பது தெரியவில்லை. ஹார்முஸ் ஜலசந்தியை நானும், காமேனிக்கு அடுத்த தலைவரும் இணைந்து நிர்வகிக்கலாம்" என்று குறிப்பிட்டார்.

ஈரானுடனான பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்றால் ஒரு வாரத்துக்குள் போர் முடிவுக்கு வரும் என்றும், இல்லையெனில் ஈரான் மீது மீண்டும் குண்டுமழை பொழிவோம் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், ஈரானின் மின் நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீது 5 நாட்கள் தாக்குதல் நடத்தப்படாது என்றும், இதுதொடர்பாக அமெரிக்க படைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.