ஹார்மூஸ் நீரிணையில் அமைதி வேண்டும்

ஹார்மூஸ் நீரிணைய அமைதி

ஹார்மூஸ் நீரிணையில் அமைதி வேண்டும்

*அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் ட்ரம்பிடம் அவசர கோரிக்கை... 

*ஐந செயலாளர் இன்று பிரஸ்ஸல்ஸ் செல்கிறார்...

*தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் ட்ரம்!!!

*கடல் கண்ணி வெடிகளை அகற்ற பிரித்தானியா தயாராகிறது!!!

எரிபொருள் நெருக்கடி உலகில் பலவகையான எதிர்த் தாக்கங்களை உருவாக்கியுள்ளதாகவும், உடனடியாக ஹார்மூஸ் நீரிணை பகுதியில் அமைதியை ஏற்படுத்துமாறும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள், கூட்டாக டொனால்ட் ட்ரம்பிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

அதேவேளை, ஹார்மூஸ் நீரிணை ஊடாக எண்ணெய் - எரிவாயு போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres) தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் (Kaja Kallas) தெரிவித்தார்.

ஐநாவின் உடனடி பங்களிப்பு தொடர்பாக குளோபல் பாங்கிங் பைனான்ஸ் (globalbankingandfinance) செய்தித் தளம் விரிவான செய்தியை பிரசுரித்துள்ளது. 

ஐரோப்பிய பிரதிநிதிகளுடன் முறைசாரா உரையாடல் ஒன்றுக்காக அன்டோனியோ குட்டெரெஸ் இன்று செவ்வாய்க்கிழமை பிரஸ்ஸல்ஸ் செல்லவுள்ளார்.  
  
இப் பின்னணியில் ஈரான் அரசினால் முடக்கப்பட்டுள்ள ஹார்மூஸ் நீரிணை பகுதியை மீண்டும் திறப்பதற்கான வழிமுறைகள் குறித்து பிரித்தானியா - ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருகிறது. 
 
பிரித்தானிய நேரப்படி நேற்று திங்கட்கிழமை இரவு அவசர சந்திப்புகள் இடம்பெற்றதாகவும், இன்று செவ்வாய்க்கிழமை அந்த உரையாடல்கள் தொடரும் என்றும் அறிய முடிகின்றது. 

ஹார்மூஸ் நீரிணையில், அதிகளவு கடல் கண்ணி வெடிகளை, ஈரான் விதைத்துள்ளது. இதனைத் தனித்து அமெரிக்கப் படைகளினால் நீக்க முடியாது. இதனை ட்ரம்ப் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்... 

இப் பின்புலத்தில் கடல் கண்ணி வெடிகளை நீக்க பிரித்தானியா உடன்பட்டுள்ளதாக, த கார்டியன் (theguardian) செய்தி வெளியிட்டுள்ளது. 

கடல் கண்ணிவெடிகள் கண்டறிந்து அழிக்கும் ரோபோக்களை அங்கு நிலைநிறுத்த பிரித்தானியா முடிவு செய்துள்ளது. 

ஆனால், பிரித்தானிய, இறுதி முடிவெடுக்கவில்லை என பிபிசி ஆங்கில செய்திச் சேவை தெரிவித்துள்ளது. ட்ரம்ப் பிரித்தானிய அரசுடன் மகிழ்ச்சியாக இல்லை
என்று பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது. 

 அமெரிக்காவை நம்பி, ஹார்மூஸ் நீரிணையில், கடல் கண்ணி வெடிகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட தயாராக இல்லை எனவும், ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையோடு இருப்பதாகவும் புளும்பேர்க் (bloomberg) செய்தி வெளியிட்டுள்ளது.

ஆகவே, இக் குழப்பமான பின்னணியில் ஐநா கடும் முயற்சி எடுத்து வருவதை அவதானிக்க முடிகிறது. ஆனாலும் இதுவரை ஈரான் அரசுடன் சமாதான பேச்சை ஆரம்பிக்க ஐநா முயற்சிக்கவே இல்லை. 

இப் பின்னணியில் தான் ஹார்மூஸ் நீரிணையில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து ஐரோப்பிய நாடுகளும் பிரித்தானியாவும் உரையாடுகின்றன. 

இன்று செவ்வாய்க்கிழமை ஹார்மூஸ் நீரிணை பகுதியில் அமைதியை ஏற்படுத்துவது பற்றிய செய்தி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டாலும், ஈரான் அதனை எந்தளவு தூரம் ஏற்கும் என்பது கேள்வியே!

அதேநேரம், தோல்வியை ட்ரம்ப் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுக்கிறார் என்பதை சர்வதேச செய்திகள் ஊடாக அவதானிக்க முடிகிறது...

அ.நிக்ஸன்-பத்திரிகையாளர்