ஹார்முஸ் முற்றுகை இது நடக்காது' என்ற மாயையில் இருந்த வாஷிங்டன்

ஹார்முஸ் முற்றுகை இது நடக்காது

ஹார்முஸ் முற்றுகை இது நடக்காது' என்ற மாயையில் இருந்த வாஷிங்டன்

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைக்குப் பதிலடியாக, அந்நாடு ஹார்முஸ் நீரிணையை முற்றாக முடக்கும் அபாயத்தை அமெரிக்காவின் பென்டகன் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (NSC) முற்றிலும் குறைத்து மதிப்பிட்டுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன . உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் பகுப்பாய்வுகளை முறையாகப் பரிசீலிக்காததே இந்த மதிப்பீட்டுத் தவறுக்கு முக்கிய காரணம் என்று CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது . இதனால், தற்போது உருவாகியுள்ள மோசமான நிலைமையைச் சமாளிக்க வாஷிங்டன் திணறி வருவதாகவும், எண்ணெய் சரக்குக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த விவகாரம் குறித்து அறிந்த பல்வேறு தரப்பினர் தெரிவிப்பதாவது: ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு குழுவினர், ஈரான் மேற்கொள்ளக்கூடிய அதிரடி நடவடிக்கையால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை தங்களது திட்டமிடலின் போது முழுமையாக கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டனர்.

'செக் அண்ட் பேலன்ஸ்' முறை சரிந்ததா?

பொதுவாக, ஈரான் போன்ற நாடுகளுடனான மோதல் சூழலில், எரிசக்தி மற்றும் கருவூலத் திணைக்களங்கள், சுயேச்சையான ஆய்வு நிறுவனங்கள் மற்றும் புலனாய்வுத் துறையின் அறிக்கைகள் அடிப்படையாகக் கொள்ளப்படும். ஆனால், டிரம்ப்பின் வெள்ளை மாளிகையில், இந்த 

நிறுவன ஆய்வுகள் முற்றாக ஓரங்கட்டப்பட்டு,

ஜனாதிபதியின் மிக நெருங்கிய ஆலோசகர்கள் கொண்ட 'சிறு வட்டமே' இறுதி முடிவுகளை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இதன் விளைவாக, நீரிணை மூடப்பட்டால்

ஏற்படும் உலகளாவிய பொருளாதாரச் சரிவு, கடல் வர்த்தகத்தின் முடக்கம் மற்றும் காப்பீட்டுச் சந்தையில் ஏற்படும் அதிர்ச்சி குறித்த எந்த ஆழமான விவாதமும் நடைபெறவில்லை என்பது வேதனையான உண்மை.

வல்லுநர்களின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கை

நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள், "ஹார்முஸை மூடுவது ஈரானின் பொருளாதாரத்துக்கே பெரும் பின்னடைவாக அமையும்; எனவே ஈரான் அந்த இறுதி முடிவை எடுக்காது" என்ற நம்பிக்கையில் இருந்துள்ளனர். கடந்த கோடையில் ஈரான் இதுபோன்ற மிரட்டலை விடுத்து பின்வாங்கிய வரலாறு, இந்தத் தவறான நம்பிக்கையை வலுப்படுத்தியது.

இந்நிலையில், எரிசக்தி மற்றும் புலனாய்வுத் துறையின் சில வட்டாரங்கள், "ஈரானின் பொறுமைக்கு எல்லை உண்டு; அவர்கள் தங்கள் இறையாண்மைக்கு நேரடி அச்சுறுத்தலை உணரும்போது, பொருளாதார இழப்பைப் பொருட்படுத்த மாட்டார்கள்" என எச்சரித்த போதிலும், அவை புறக்கணிக்கப்பட்டன.

நிழல் கடற்படையின் ஆபத்தான உலகம்

தற்போது நெருக்கடி ஏற்பட்ட பின்னர், எண்ணெய்த் தாங்கிகளுக்கு அமெரிக்கக் கடற்படை பாதுகாப்பு அளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பென்டகன் அளித்துள்ள பதில், நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது.

"ஈரானியப் படைகள் பயன்படுத்தும் நவீன ட்ரோன்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கடலில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதில் எங்கள் கடற்படை கவனம் செலுத்தியுள்ளது. எனவே, தற்போதைக்கு வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது" என எரிசக்திச் செயலாளர் கிறிஸ் ரைட் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதேசமயம், உடனடி நெருக்கடியைச் சமாளிக்க, கடலில் சிக்கித் தவிக்கும் ரஷ்ய எண்ணெயை வாங்க அமெரிக்கா தற்காலிக அனுமதி வழங்கியிருப்பதாக கருவூலச் செயலாளர் ஸ்கொட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் விலை உயவும் டிரம்ப்பின் மனநிலை

ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 120 டாலரைத் தாண்டியுள்ளது. உலகின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 20% ஹார்முஸ் வழியாகவே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல், சவுதி அரேபியா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் ஆகியவை இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணங்கள்

அமெரிக்காவின் அவசர நடவடிக்கைகள்:

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாக்கவும் வெள்ளை மாளிகை பின்வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது:அமெரிக்கக் கடல்சார் சட்டத்தில் தளர்வு அளித்து, வெளிநாட்டுக் கப்பல்கள் அமெரிக்காவின் உள்நாட்டுத் துறைமுகங்களுக்கிடையே எரிபொருளைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். (இந்த நடவடிக்கைக்கு கடல்சார் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன)

சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) ஒத்துழைப்புடன், சுமார் 17.2 கோடி பேரல் (172 மில்லியன் பீப்பாய்கள்) கச்சா எண்ணெயை மூலோபாய கிடங்கில் இருந்து வெளியிட்டு சந்தைக்கு விட உத்தரவிடப்பட்டுள்ளது. கோடைக் காலத்தில் பெட்ரோல் உற்பத்தியில் விதிக்கப்படும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, உற்பத்தியை அதிகரிக்க அனுமதி வழங்கப்படும்.

கொள்கை வகுப்பில் பேரிழப்பு:   

நீரிணையை முடக்கும் அச்சுறுத்தல் வெறும் வார்த்தையாக இல்லாமல், நிஜத்தில் நிகழ்ந்துவிட்டதை அமெரிக்க பாதுகாப்புத் துறையினால் இன்னும் முழுமையாக நம்ப முடியவில்லை.

இரு பெரும் கட்சிகளின் ஆட்சிகளிலும் பணியாற்றிய மூத்த புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் வருத்தத்துடன் கூறியதாவது: "இது எங்கள் தலைமுறையின் மிகப்பெரிய கொள்கைப் பிழை. பல தசாப்தங்களாக இந்த ஒரு நாளுக்காக நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், அது ஒருபோதும் நிகழாது என்ற மாயத்தில் இருந்தோம். இன்று அது நிகழ்ந்துவிட்டது. நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம்."

இந்நிலையில், இந்த முடக்கம் உலக உணவுப் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் என்று ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாடு (UNCTAD) எச்சரித்துள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வளரும் நாடுகளில், உணவு மற்றும் போக்குவரத்துச் செலவுகள் பன்மடங்கு உயர்ந்து, பஞ்சம் போன்ற பேரிடர்களைத் தூண்டும் அபாயம் இருப்பதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.