அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் 1,400 பொதுமக்கள் பலி
அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் மோதல் 1,400 பொதுமக்கள் பலி
அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான மோதல் ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மனித உரிமைகள் செய்தி நிறுவனமான எச்ஆர்ஏஎன்ஏ (HRANA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மார்ச் 22 வரையிலான காலப்பகுதியில் ஈரானில் குறைந்தது 1,407 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் 214 சிறுவர்களும் அடங்குவர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் (மார்ச் 22) நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு சிறுவர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் எச்ஆர்ஏஎன்ஏ தெரிவித்துள்ளது. இதில் ஒரு பெண்ணும் அடங்குவார்.
சுகாதாரத் துறைக்கு பாரிய சேதம்
ஈரானின் சுகாதார அமைச்சர் முகம்மது ரேசா ஜாஃபர்கந்தி, உத்தியோகபூர்வமாக வெளியிட்ட தரவுகளில், 18 வயதுக்குட்பட்ட 210 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,510 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மோதலின் காரணமாக 300 சுகாதார, மருத்துவ மற்றும் அவசர சேவை மையங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டுக்கு அற்றுப்போயின என்றும் அவர் தெரிவித்தார்.
15 மாகாணங்களில் தாக்குதல்
எச்ஆர்ஏஎன்ஏவின் அறிக்கையின்படி, ஈரானின் 15 மாகாணங்களில் 112 சம்பவங்களின் ஊடாக குறைந்தது 206 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. தலைநகர் தெஹ்ரான் மாகாணம் மொத்தத் தாக்குதல்களில் 39 சதவீதத்தையும், ஹோர்முஸ்கான் மாகாணம் 19 சதவீதத்தையும், இஸ்பஹான் மாகாணம் 10 சதவீதத்தையும் எதிர்கொண்டுள்ளன.
குடியிருப்புக் கட்டிடங்கள், விளையாட்டு வளாகங்கள், மின் நிலையங்கள் போன்ற சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களும் தாக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்க தளபதி விளக்கம்
அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதை வைஸ் அட்மிரல் பிராட் கூப்பர், ஈரானியப் படைகள் மக்கள் நெருக்கமான பகுதிகளில் இருந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவுவதால் பொதுமக்கள் அபாயத்திற்கு உள்ளாகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
தகவல் தொடர்பு துண்டிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான அணுகல் கட்டுப்பாடுகள் காரணமாக உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Editor