உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் - நாளை நாடு முழுவதும் விசேட பிரார்த்தனை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்
2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் நடந்த உலகையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்படுகின்றன. 269 பேர் உயிரிழப்புக்கும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைவதற்கும் காரணமான இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் முழு நீதி கிடைக்காத நிலையில், இம்முறை நினைவேந்தல் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நினைவேந்தல் நடைபெறும். இதில் வெளிநாட்டுத் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் சர்வமதத் தலைவர்களின் விசேட உரைகள் இடம்பெறவுள்ளன.
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஆயர்கள் தலைமையில் காலை 7:30 மணிக்கு விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, காலை 8:45 மணிக்கு நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்படும்.
மாலை 4 மணிக்கு நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா மைதானத்திலிருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரை "நீதி மற்றும் உண்மை வேண்டி" மாபெரும் பிரார்த்தனைப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலைத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்ததுடன், 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் முழுமையான நீதி கிடைக்கவில்லை என்ற கோரிக்கைக்கு மத்தியில் இம்முறை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் தங்களது அவசியமான பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளவும், மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Editor