நிலக்கரி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: முன்று மாதங்களில் உண்மை வெளிச்சத்துக்கு– டில்வின் சில்வா

நிலக்கரி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: முன்று

நிலக்கரி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: முன்று மாதங்களில் உண்மை வெளிச்சத்துக்கு– டில்வின் சில்வா

எதிரணியினர் நிலக்கரி தொடர்பில் தமது கட்சிக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மூன்று மாதங்களுக்குள் ஜனாதிபதி விசாரணைக்குழு உண்மையை வெளிக்கொணரும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில், உச்ச நீதிமன்றம், மேல் முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த மூன்று நீதிபதிகள் அடங்கிய முழுமையான நீதித்துறை அதிகாரங்களைக் கொண்ட ஆணைக்குழு தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறினார்.

“எங்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்கள், மூன்று மாதங்களில் அறிக்கை வெளியானதும் நீதியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உண்மையான மோசடிகள் நடந்தது அவர்களது காலத்தில்தான்,” என அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் கொள்கலன் (கண்டெய்னர்) தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் பாராளுமன்ற தெரிவுக்குழுவால் விசாரிக்கப்பட்டு பொய்யானவை என நிரூபிக்கப்பட்டதாகவும், தற்போது யாரும் அதைப் பற்றி பேசவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிலக்கரியின் தரம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், சில கப்பல்களில் தரக் குறைபாடு காணப்படுவது சாதாரணமானதாக இருந்தாலும், எந்தவித நிதி மோசடியும் நடைபெறவில்லை என்பதில் உறுதி அளித்தார்.

மேலும், சமீபத்தில் வெளிநாட்டு நாணய பரிவர்த்தனை தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளித்த அவர், அது அதிகாரிகளின் தவறே அன்றி மோசடி அல்ல என்றும், வங்கித் துறையில்கூட இத்தகைய மனிதப் பிழைகள் நிகழலாம் என்றும் கூறினார்.

தனது இயக்கத்தில் திருடர்களுக்கும் மோசடிக்காரர்களுக்கும் இடமில்லை என்றும், அத்தகையவர்கள் நீடிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, “திசைகாட்டி அரசு” கூட திருடுகிறது எனக் கூறி, தங்களது மோசடிகளை மறைக்க எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.