உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: சர்வதேச அங்கீகாரத்துடன் விசாரணை நடத்த வேண்டும் - சாணக்கியன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: சர்வதேச அங்கீகாரத்துடன் விசாரணை நடத்த வேண்டும் - சாணக்கியன்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விடயமாக இருந்தாலும் சரி, பொறுப்புகூறல் விடயமாக இருந்தாலும் சரி, சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய விசாரணையை நடத்தினால் மாத்திரமே அரசினால் நிரந்தரமான தீர்வை வழங்க முடியும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்

செங்கலடி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்

சுரேஷ் சலேயின் கைது தொடர்பாகவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் தாம் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக நினைவுகூர்ந்த அவர், சர்வதேச விசாரணை வந்தால் மாத்திரமே தம்மிடமுள்ள சாட்சியங்களை ஒப்படைக்க முடியும் என அப்போது கூறியதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் பலர் சாட்சியங்களை வழங்க முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

"சுரேஷ் சலேயின் கைது மூலம் இலங்கை வரலாற்றில் நடக்காதது நடந்திருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த நல்ல விடயங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். நல்ல விடயங்களை நாங்கள் மறுப்பது கிடையாது. அந்த வகையில் சுரேஷ் சலே போன்று உயர்மட்ட இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகளை கைது செய்வது இந்த அரசாங்கம் செய்துள்ள பெரியதொரு விடயம். ஆனால் இன்னமும் பலர் இருக்கின்றார்கள்" என அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையும், அதனைத் தொடர்ந்தும் இராணுவ புலனாய்வுத்துறை மேற்கொண்ட பல விடயங்கள் தொடர்பாக பலர் கருத்துக்களை முன்வைத்திருப்பதாகவும், பாராளுமன்றத்தில் தாமும் அவற்றைச் சுட்டிக்காட்டியதாகவும் சாணக்கியன் தெரிவித்தார்.

இவ்விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்குமாயின், அது அரசுக்கு நிரந்தரமான வெற்றியைப் பெற்றுத் தரும் என அவர் வலியுறுத்தினார்.