யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (09)அதிகாலை 1.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், மருந்துகள் வைத்திருந்த களஞ்சியப் பகுதி முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது. பெறுமதிமிக்க மருந்துகள் எரிந்து நாசமாகியதால் வைத்தியசாலைக்குப் பல கோடி ரூபா நிதி இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீக்கிரையான மருந்துக் களஞ்சியப் பகுதி, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் ஆய்வுகள் நிறைவடையும் வரை பொலிஸாரின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.
"எரியுண்ட களஞ்சியசாலையில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் உள்ளிட்ட அதிதீவிர சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் பெறுமதிமிக்க மருந்துகள் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் தற்போது தீக்கிரையாகியுள்ளன தெரிவித்தார்..
தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்களை உறுதிப்படுத்துவதற்காக அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் ஆய்வுகள் நிறைவடையும் வரையே இப் பகுதி பொலிஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்படும் எனவும், பொலிஸ் விசாரணை மற்றும் வைத்தியசாலையின் உள்ளக விசாரணை ஆகிய இரண்டும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
"தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்களை உறுதிப்படுத்த பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை அவசியமாகும். அதுவரை எரியுண்ட பகுதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டிருக்கும்" என்று எம்.பி. ஸ்ரீபவானந்தராஜா மேலும் தெரிவித்தார்.
இந்த அனர்த்தம் காரணமாகப் பல முக்கிய மருந்துகள் இழக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் நாட்களில் வைத்தியசாலையின் சேவைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். முழுமையான அறிக்கை வெளியான பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும்.