யதார்த்த அரசியல் பற்றிப் பேசும் தமிழர்களுக்கு!!

யதார்த்த அரசியல் பற்றிப் பேசும் தமிழர்களுக்கு!!

யதார்த்த அரசியல் பற்றிப் பேசும் தமிழர்களுக்கு!!
யதார்த்த அரசியல் பற்றிப் பேசும் தமிழர்களுக்கு!!
யதார்த்த அரசியல் பற்றிப் பேசும் தமிழர்களுக்கு!!
யதார்த்த அரசியல் பற்றிப் பேசும் தமிழர்களுக்கு!!

* போர் வெற்றி நாளாக சித்தரித்த சிங்கள ஊடகங்கள்

* இணக்க அரசியலின் பயன் தான் என்ன? 

* “கொலை செய்வோம்“! மௌன சாட்சிகளாக பார்த்துக் கொண்டு நின்ற பொலிஸார்...

--- --- ---

சிங்கள முற்போக்குச் சக்திகளுடன் கைகோர்த்துப் பயணிப்போம் எனக் கூறி, 'சுயநிர்ணய உரிமை', 'இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை' ஆகிய நியாயங்கள், தேவையற்றவை என முழங்கும் சில தமிழ் முற்போக்காளர்களும், 'யதார்த்த அரசியல்' பேசுவதாக வாதிடும் தமிழ் மிதவாதிகளும், தமிழ் ஆய்வாளர்கள் சிலரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பற்றிய சிங்களச் சமூக ஊடகப் பதிவுகளை எந்தக் கண்ணோட்டத்தில் நோக்குகின்றனர்?

நேர்மையுடன் இயங்கும் ஒரு சில சிங்கள முற்போக்குச் சக்திகளால் கூட, தென்னிலங்கையின் பௌத்த பேரினவாத போக்கை இன்னமும் மாற்றியமைக்க முடியவில்லை என்ற கசப்பான யதார்த்தத்தையே இச் சமூக ஊடகப் பதிவுகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. 

ஆகவே, தென்னிலங்கையின் மாற்றங்களை மாத்திரம் நம்பியிருக்கும் தமிழர்களின் மிதவாத அரசியல் மூலோபாயம் மிகக் குறுகிய எல்லையை கொண்டது என்பது இதன் மூலம் மிகத் தெளிவாகிறது.

'சுயநிர்ணய உரிமை' 'சர்வதேச நீதி' போன்ற அடிப்படை நியாயங்களைக் கைவிட்டு, இலங்கை அரசாங்கத்துடன் முழுமையாக ஒத்துழைக்கும் தமிழ்ப் பிரதிநிதிகளால் கூட, தென்னிலங்கையின் இந்த 'போர் வெற்றி மனோபாவத்தை' (Victory Mindset) எள்ளளவும் மாற்றியமைக்க முடிவதில்லை.

தமிழ் மக்களின் குறைந்தபட்ச கூட்டு நினைவேந்தல் உரிமையைக் கூட அங்கீகரிக்க மறுக்கும் இத்தகையதொரு அடக்குமுறை அரசியல் சூழலில், வெறும் 'இணக்க அரசியல்' மூலமாக 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்ற வரலாற்றுப் பாடத்தையே இந்த நிகழ்வுகள் உணர்த்தி நிற்கின்றன.

ஈழத்தமிழர்கள் எவ்வளவுதான் அரசாங்கத்துடன் இணங்கிப் போனாலும், போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை "பயங்கரவாதிகள்" என்றும், அவர்களைக் கொன்ற இலங்கை இராணுவத்தை "மாவீரர்கள்" என்றும் பார்க்கும் ஒரு சித்தாந்தக் கட்டமைப்பிற்குள் தான் வாழ வேண்டியிருக்கும்.

பொருத்தமான அரசியல் தீர்வு இல்லாத வெறும் இணக்க அரசியல் என்பது, ஈழத்தமிழர்களின் சுயமரியாதையையும் நீண்டகால உயிர்த் தியாகங்களையும் அடகு வைத்துப் பெறப்படும் தற்காலிக சலுகைகளாகவே முடியும் என்பதை முள்ளிவாய்க்கால் பற்றிய சிங்கள சமூக ஊடகப் பதிவுகள் காண்பிக்கின்றன.

ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், குறிப்பாக முள்ளிவாய்க்காலில் பேரழிவிற்குள்ளான மக்களின் நீதிக்காகவும் தென்னிலங்கையில் முற்போக்குச் சிங்கள இளைஞர்களும் சிவில் அமைப்புகளும் குரலெழுப்பி வருவது மறுக்க முடியாத உண்மையாகும். 

இருந்தாலும், அவர்களின் நியாயமான குரல்கள் பிரதான சிங்கள ஊடகங்களாலோ அல்லது பிரதான அரசியல் கட்சிகளினாலோ இதுவரை முழுமையாக உள்வாங்கப்படவில்லை என்பதை மறுக்க முடியாது. 

அதேநேரம், 'யதார்த்த அரசியல்' பேசும் சில தமிழ் தலைமைகள், சில தமிழர்கள் அரசாங்கத்துடன் இணங்கிச் செல்ல முனைவது ஒரு மூலோபாயமாக (Strategy) இருக்கலாம். 

ஆனால், தென்னிலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் அந்த உத்தியை ஒரு பலவீனமான தந்திரோபாயமாகவே மாற்றியமைக்கிறது அல்லவா?

இதனை நேற்று கொழும்பில் அரங்கேறிய எதிர்ப்புப் போராட்டங்கள் மிகத் தெளிவாகப் பிரதிபலித்துள்ளன. 

குறிப்பாக, நினைவேந்தலை முன்னிட்டு சிங்கள அமைப்புகளினால் வெளியிடப்பட்ட அறிக்கைகள், இந்நாடு பௌத்த மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதைப் பகிரங்கப்படுத்தியுள்ளன.

வெள்ளவத்தையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை பார்த்து, சிங்கள அமைப்பைச் சேர்ந்த சிலர் 'உங்களை கொலை செய்வோம்' என உரத்த குரலில் அச்சுறுத்திய வேளையிலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் அதனைப் பார்த்துக் கொண்டு மௌன சாட்சிகளாக நின்றனர்.

ஆகவே, இலங்கையில் மே 18 / 19 ஆகிய திகதிகள் வடக்கு - கிழக்கில் போரினால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் பேரழிவை நினைவு கூறும் கூட்டுத் துக்க நாளாகவும், தெற்கில் போரை முடிவுக்குக் கொண்டு வந்த இலங்கை இராணுவத்தை கொண்டாடும் 'போர் வெற்றி நாளாகவும்' இருவேறு துருவமுனைப்பட்ட முரண்பாட்டு அரசியலாகப் பட்டவர்த்தனமாகப் பிரதிபலித்தன.

சிங்கள முகநூல் (Facebook), எக்ஸ் (Twitter/X) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலைத்தளங்களில் 'ரணவிரு' (Ranaviru Samaruma) இராணுவ வீரன் நினைவு என்ற ஹஷ்டக்குகளுடன் (Hashtags) ஆயிரக்கணக்கான தேசியவாத அஞ்சலிப் பதிவுகள் பெருக்கெடுத்தன.

பெரும்பாலான பிரதான சிங்கள ஊடகங்கள் (முன்னணி நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகள்) இந்நாளை விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான 'போர் வெற்றி நாளாகவே' (War Victory Day) கட்டமைத்தன. 

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் மேற்கொண்ட கூட்டு நினைவேந்தல் உரிமையை, சில சிங்கள ஊடகங்கள் 'பயங்கரவாத மீளுருவாக்கத்திற்கான களம்' என்ற ஆபத்தான கோணத்திலேயே விவாதப் பொருளாக்கின.

இலங்கையின் பிரதான சிங்கள வெகுஜன ஊடகங்களும், சிங்கள சமூக ஊடகப் பரப்பும் இன்னும் தமிழ் மக்களின் ஒட்டுமொத்தப் பேரிழப்பையோ அல்லது கூட்டுத் துயரத்தையோ மனிதநேயக் கண்ணோட்டத்துடன் கூட, அங்கீகரிக்கத் தயாராக இல்லை என்பதையே இந்த மேலாதிக்கச் சிந்தனை அப்பட்டமாக்குகின்றன.

சிங்கள மக்கள் மத்தியில் இத்தகைய மேலாதிக்க மனநிலை நீடிக்கும் வரை, சர்வதேச அழுத்தம் அல்லது சர்வதேசப் பொறிமுறைகள் இன்றி ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி சாத்தியமில்லை என்ற தமிழ்த் தேசிய அரசியல் கோட்பாட்டு நியாயம் வலியுறுத்தப்பட்டு நிற்கிறது.

ஆனால், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே நிலவும் உட்கட்சி முரண்பாடுகள், தனிநபர் மோதல்கள் மற்றும் அரசியல் காழ்ப்புணர்வுகள் ஆகியவை, ஈழத் தமிழர்களின் கூட்டு அரசியல் நியாயப்பாட்டை மழுங்கடிப்பதற்குக் காரண - காரியம் ஆகின்றன. 

ஆகவே, தேர்தல் அரசியல் நலன்களுக்கு அப்பாற்பட்டு, ஈழத்தமிழ்த் தரப்பு சமரசமற்ற பலமான அரசியல் பேரியக்கம் (அல்லது கட்டமைப்பு) ஒன்றை உருவாக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில், 2009 மே மாதம் போர் இல்லாது ஒழிக்கப்பட்ட பின்னரான சூழலில், தெற்கில் தொடர்ச்சியாகத் தீவிரமடைந்து வரும் பௌத்த பேரினவாதம், இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பை மேலும் இருப்புக் கொள்ளச் செய்யும்.

கடந்த 17 வருடங்களாக இத்தகைய அதிகாரக் குவிப்பு மற்றும் கட்டமைப்புச் சிதைப்பு வேலைத்திட்டங்கள் தான் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன என்பதை உணர்தல் அவசியமாகும்.

அ.நிக்ஸன்-பத்திரிகையாளர்