திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு மற்றும் உட்கட்சி மோதல்களை அடுத்து, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) இன்று திமுகவில் இணைந்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த அரசியல் நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் கே. பழனிசாமிக்கும் (எடப்பாடியார்) ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு கடுமையான உட்கட்சிப் பூசலாக மாறியது. இதன் விளைவாக, ஓ. பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' என்ற அமைப்பைத் தொடங்கி, தொடர்ந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் தனிக் கட்சி தொடங்கி செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்தார். இந்நிலையில், ஓ.பி.எஸ்ஸின் நீண்டகால ஆதரவாளர்கள் பலரும் அவரை விட்டு விலகி, பல்வேறு அரசியல் கட்சிகளில் இணையத் தொடங்கினர்.

ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுகவுடன் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இச்சூழலில், ஓ.பி.எஸ் திமுக அல்லது நடிகர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைவார் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

மூன்று முறை அதிமுக சார்பில் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தவர், வரலாற்று ரீதியாக அதிமுகவின் எதிர்க்கட்சியான திமுகவுடன் இணைய மாட்டார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறி ஓ. பன்னீர்செல்வம் இன்று திமுகவில் இணைந்ததன் மூலம், தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.