செம்மனி விவகாரம் சாட்சியங்களை ஐ.நா ஒஸ்லாப் திரட்டுகிறதா?
செம்மனி விவகாரம் சாட்சியங்களை ஐ.நா ஒஸ்லாப் திரட்டுகிறதா?
* குற்றவியல் விசாரணை வலயமாக பிரகடனம் செய்ய வேண்டும் என வலியுறுத்த தவறும் தமிழ்த் தேசியக் கட்சிகள்.
* ஆதாரங்களை அறிவியல்³ ரீதியாக ஆவணப்படுத்தத் தவறும் தமிழ்தரப்பு
* இராஜதந்திரிகள் பார்வையிடலாம் என்ற நீதிமன்ற உத்தரவு ஏன் நடைமுறைக்கு வரவில்லை?
ஐ.நா இலங்கைக்கான பொறுப்புக்கூறல் திட்டத்தின் (OSLap) கீழ் இயங்கும் 'சாட்சிய சேகரிப்புப் பொறிமுறை' (Evidence Collection Mechanism), கட்டமைக்குரிய பதவிக் காலம் 2027 ஆம் ஆண்டு வரை நீடித்துள்ள சூழலில், செம்மணி மற்றும் அரியாலை சிந்துபாத்தி போன்ற மனிதப் புதைகுழிகளில் இருந்து கண்டெடுக்கப்படும் தடயவியல் சான்றுகளை திரட்டி வருகிறது.
எதிர்கால சர்வதேச பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் மற்றும் நீதி விசாரணைகளுக்காக இவை முறையாக ஆவணப்படுத்தப்பட்டு வருவதாக கொழும்பிலுள்ள ஐ.நா. வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் 2022 இல் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானம். பெரியளவில் ஈழத்தமிழர்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்றாலும், ஒஸ்லாப் எனப்படும் 'இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம்' (Sri Lanka Accountability Project) இன்று வரை சாட்சியங்களைத் திரட்டி வருகிறது.
2024 ஒக்ரோபரில் இந்த ஒஸ்லாப் சாட்சியப் பொறிமுறையின் கால அவகாசம் 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுமுள்ளது. தற்போது 60/1 தீர்மானமாக இது அழைக்கப்படுகிறது.
தீர்மானத்தின் பந்தி 8 (Paragraph 8) இல் "இலங்கைத் தீவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான சான்றுகளைச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல்" (to collect, consolidate, analyze and preserve information and evidence) என்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் 2023 - 2024 ஆண்டுகளில் சமர்ப்பித்த அறிக்கைகளில் இலங்கையில் அகழ்ந்து எடுக்கப்படும் "புதைகுழிகள்" (Mass Graves) பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப் புதைகுழிகளை வெறும் குற்றச்சாட்டாக பார்க்காமல், "அறிவியல் ரீதியான தடயங்கள்" என ஆணையாளர் வகைப்படுத்தியுள்ளார்.
தற்போது செம்மணியில் கண்டெடுக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் தொடர்பான தரவுகளை ஒஸ்லாப் பொறிமுறை ஏற்கனவே கவனத்தில் எடுத்துள்ளதாக கொழும்பு ஐ.நா அலுவலகத் தகவல்கள் கூறுகின்றன.
செம்மணி, மன்னார், கொக்குத்தொடுவாய் போன்ற இடங்களில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள், பாதிக்கப்பட்டவர்களின் உடைகள், மற்றும் துப்பாக்கித் தோட்டாக் குண்டுகள் போன்றவற்றின் நிழற் படங்கள் மற்றும் வீடியோக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, மன்னார் சதொச புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்பு கூடுகளில் 6 எலும்புக் கூடுகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள "பீட்டா அனலிடிக்" (Beta Analytic Inc.) என்ற கார்பன் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டிருதன.
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பீட்டா அனலிடிக் நிறுவனம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில், அந்த எலும்புகள் கி.பி. 1499 முதல் 1719 வரை அதாவது, போர்த்துக்கேயர் காலப் பகுதிக்குரிய பழமையானவை என குறிப்பிட்டிருந்தது.
ஒரே புதைகுழியில் மிக நெருக்கமாகக் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் காலக்கணிப்பில் சுமார் 231 ஆண்டுகள் வித்தியாசம் இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஆனால், புதைகுழி அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த தடயவியல் தொல்பொருள் ஆய்வாளரான பேராசிரியர் ராஜ் சோமதேவா, அமெரிக்க அறிக்கையை முழுமையாக ஏற்க முடியாது என மன்னார் நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தார்.
ஒரு குறுகிய இடத்தில் புதைக்கப்பட்ட உடல்களுக்கு இடையே பெரிய இடைவெளி அமைந்திருப்பது அறிவியல் ரீதியாக சாத்தியமற்றது என அவர் வாதிட்டிருந்தார்.
அத்துடன், உடல்கள் முறையான ஒரு மயானத்தில் புதைக்கப்பட்டவை அல்ல. மாறாக ஒன்றன் மேல் ஒன்றாக எறியப்பட்ட நிலையில் இருந்தன. பல எலும்புகள் கைகள் கட்டப்பட்ட நிலையில் அல்லது உடைக்கப்பட்ட நிலையில் இருந்தன. இது ஒரு போர் அல்லது வன்முறைச் சூழலில் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டதை காட்டுவதாக ராஜ் சோமதேவா அப்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
மன்னார் நிலப்பகுதியில் உள்ள மண்ணின் இரசாயனத் தன்மை அல்லது கடலோரக் காற்றின் தாக்கம் காரணமாக “கார்பன்-14” பரிசோதனையில் பிழையான முடிவுகள் வர வாய்ப்புள்ளதாக அவர் சந்தேகமும் எழுப்பியிருந்தார்.
எலும்புகளுடன் கண்டெடுக்கப்பட்ட துணித் துண்டுகள், சில பிளாஸ்டிக் பொருட்கள் அந்த எலும்புகள் கி.பி 1500-களில் புதைக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதற்கான நேரடிச் சான்றுகளாக அவராலும், ஏனைய நிபுணர்களாலும் அப்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை மன்னார் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
ஆனாலும், மன்னார் சதோச விவகாரம் தற்போது சட்ட ரீதியான தேக்க நிலையில் உள்ளது. கொழும்பு அரசியல் அழுத்தம் காரணமாக இருக்கலாம்.
அதேநேரம், கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் செம்மணி அரியாலை சிந்துபாத்தி மனித புதைகுழியை நேரில் அவதானிக்கலாம் என யாழ் நீதவான் நீதிமன்றம் சென்ற ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியது.
ஆனால், இராஜதந்திரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், நிதி ஒதுக்கீடு, நிர்வாக பிரச்சினைகள் காரணமாக, அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படாமல் இருந்தன.
அத்துடன் மழைநீர் தேங்கி நின்ற காரணங்களினாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனால் இராஜதந்திரிகளின் வருகை தாமதம் ஏற்பட்டது. ஆனால், மீண்டும் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
ஆனால், இன்று வரையில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் அழைத்து வரப்படவில்லை.
அதேவேளை, அகழ்வுப் பணிகள் ஒரு சட்ட மருத்துவ அதிகாரியின் மற்றும் நீதவானின் கட்டுப்பாட்டில் இடம்பெறுவதால், அரசியல் பிரதிநிதிகள் நேரடியாகத் தலையிடுவது "நீதிமன்ற அவமதிப்பு" அல்லது "சாட்சியங்களைச் சிதைத்தல்"v என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகலாம் என்ற அச்சம், தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் உள்ளது.
அத்துடன், அநுர அரசாங்கம் பதவிக் காலத்தில் கடுமையான சர்வதேச அழுத்தங்களைக் கொடுப்பது, புதிய பேச்சுவார்த்தை வாய்ப்புகளைப் பாதிக்கும் என்ற ஒரு தவறான முற்போக்குப் பார்வை தமிழ் தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலரிடம் உள்ளது.
மன்னார் 'சதொச' புதைகுழியில் நடந்தது போல, ஆரம்பத்திலேயே உரிமை கோரி விட்டுப் பின்னர் கார்பன் பரிசோதனையில் முடிவுகள் மாறினால், அது அரசியல் செயற்பாடுகளின் நம்பகத்தன்மையை குறைத்து விடும் என்ற தவறான எச்சரிக்கை உணர்வும் சில உறுப்பினர்களிடம் உண்டு.
ஆனால், ஒஸ்லாப் எனப்படும் ஐ.நா சாட்சிய பொறிமுறை, சர்வதேச தடயவியல் நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்று அவற்றை ஆவணப்படுத்தி வருவதாகவும், சேகரிக்கப்படும் ஆதாரங்கள் சிதைக்கப்படாமல் இருப்பதையும், ஒஸ்லாப் பொறிமுறை பேணுவதாகவும் ஐ.நா தகவல்கள் கூறுகின்றன.
ஆகவே, தமிழர் தரப்பும் மனித உரிமை அமைப்புகள் அமைப்புகளும், செம்மணி அரியாலை சிந்துபாத்தியில் கண்டெடுக்கப்படும் ஒவ்வொரு தடயத்தையும், குறிப்பாக படங்கள் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கைகளை அதிகாரப்பூர்வமாக ஐ.நா.வின் ஒஸ்லாப் பொறிமுறைக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் இணையத்தளம் வழியாகவோ சமர்ப்பிக்க முடியும்.
அத்துடன், மன்னார் சதொச மனித எலும்புக்கூடுகள் பற்றிய அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் முரண்பாடான அறிக்கைகள், அது பற்றி ராஜ் சோமதேவா மன்னார் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய நியாயமான கருத்துக்களையும் ஒஸ்லாப் சாட்சிய பொறிமுறைக்கு அனுப்பலாம்.
ஆனால், இது பற்றிய எந்தவொரு அணுகுமுறைகள் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் இருப்பதாக தெரியவில்லை.
தற்போது நடைபெற்று வரும் அகழ்வில், 250 இற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள், குழந்தைகளின் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதால், இப் பிரதேசத்தை ஒரு "குற்றவியல் விசாரணை வலயமாக" பிரகடனப்படுத்துமாறு, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஜெனீவாவுக்கு கடிதம் அனுப்பலாம்.
இலங்கை நாடாளுமன்றத்திலும் கோரலாம்.
சென்ற ஆண்டு ஓகஸ்ட் மாதம், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து ஐநாவுக்கு அனுப்பிய கடிதத்தில், செம்மணி உள்ளிட்ட புதைகுழிகளின் சாட்சியங்களைப் பாதுகாக்க "சர்வதேச தொழில்நுட்ப உதவி மற்றும் மேற்பார்வை" (International Monitoring & Supervision) அவசியம் என வலியுறுத்தினர்.
அங்கு கண்டெடுக்கப்படும் சிறுவர்கள், குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் இலங்கையில் நடந்த "இன அழிப்புக்கான" நேரடி ஆதாரங்கள் என்பதால், இதனை வெறும் குற்றவியல் வழக்காகப் பார்க்காமல் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் சில உறுப்பினர் வாதிட்டு இருந்தனர்.
அகழ்வுப் பணிக்கான நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்தினர். இதனால், 2.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
செம்மணி அகழ்வுப் பணிகளை சர்வதேச இராஜதந்திரிகள் பார்வையிடும் சூழலைப் பயன்படுத்தி, இதனை ஓர் 'இன அழிப்பின் ஆதாரமாக அங்கீகரிக்கக் கோரி சர்வதேச நாடுகளிடம் அழுத்தம் கொடுக்க முடியும்.
சர்வதேச நீதிமன்றத்தில், இலங்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய ஒரு நாட்டின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள இது உரிய சந்தர்ப்பம.
இத்தகைய சட்ட ரீதியான சர்வதேச நெருக்கடிகளைத் தமிழர் தரப்பு முறையாகக் கையாளத் தொடங்கினால், இலங்கை அரசு தனது நீண்டகாலக் கட்டமைப்புச் சிந்தனைகளில் இருந்து இறங்கி வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
இது இந்திய மற்றும் அமெரிக்க வல்லரசு நாடுகளின் கவனத்தை நேரடியாக ஈர்க்கும் என்பதுடன், இந்திய வெளியுறவு அமைச்சர் போன்ற உயர்மட்டத் தலைவர்கள் நேரடியாகக் தமிழர் பிரதேசத்துக்கு வந்து பேச்சுவார்த்தைகளை நடத்தும் சூழலை உருவாக்கும்.
இவ்வாறான ஒரு 'சர்வதேச பேரம் பேசும் சக்தியை உருவாக்குவதற்கும், சர்வதேசச் சட்டங்கள் ஊடாக ஜனநாயக வழியில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தயங்குவதன் பின்னணி என்ன?
நாடாளுமன்றத்தில், தேர்தல் பிரச்சாரங்களில் 'இனப்படுகொலை' என்ற சொல்லை தமிழ்க் கட்சி உறுபபினர்கள் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், அதனை சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கான சான்றுகளை சேகரிப்பதற்கோ அல்லது சர்வதேச சட்ட வல்லுநர்களுடன் இணைந்து செயல்படுவதற்கோ ஒரு நிரந்தரமான பொறிமுறையை எந்த ஒரு கட்சியும் இதுவரை உருவாக்கவில்லை.
செம்மணி போன்ற இடங்களில் கிடைக்கும் ஆதாரங்களை அறிவியல் ரீதியாக ஆவணப்படுத்தத் தவறுவது இவர்களின் முதன்மையான பலவீனமாகும்.
ஒரு நட்பு நாட்டின் ஊடாக இலங்கையை சர்வதேச⁴ நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்துவதற்கான எந்த ஒரு இராஜதந்திரத்திலும் தமிழ்க் கட்சிகள் முயற்சி எடுக்கவில்லை.
ஆனால், ஒவ்வொரு வருடமும் ஐ.நா மனித உரிமைச் சபையில் அறிக்கை சமர்ப்பிப்பதோடு மாத்திரம் தங்கள் பணியை நிறுத்திக் கொள்கின்றன.
அத்துடன், அமெரிக்க - இந்திய அரசுகள், இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கான 'சர்வதேச சட்ட ஏற்பாடுகள் எதிலும் தமிழ்த்தரப்பு முயற்சி எடுக்கவில்லை.
ஆகவே, செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட சிறுவர்கள், குழந்தைகள் ஆகியோரின் எச்சங்களை ஒரு "சர்வதேச குற்றமாக" முன்னிறுத்தி, ஜனநாயக போராட்டங்கள், இராஜதந்திர முன்னெடுப்புகளில் ஈடுபட்டால், இந்திய வெளியுறவு அமைச்சர் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடியாக வந்து இறங்கும் நிலை உருவாகும்...
அ.நிக்ஸன்-பத்திரிகையாளர்
Editor