இஸ்ரேலின் பாலஸ்தீனியர்களை குறிவைக்கும் மரணதண்டனைச் சட்டம் சர்வதேச சட்டத்தை மீறுகிறது

இஸ்ரேலின் பாலஸ்தீனியர்களை குறிவைக்கும் மரணதண்டனைச் சட்டம்

இஸ்ரேலின் பாலஸ்தீனியர்களை குறிவைக்கும் மரணதண்டனைச் சட்டம் சர்வதேச சட்டத்தை மீறுகிறது
இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர்,

 பாலஸ்தீனியர்களை மட்டும் குறிவைத்து இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மரணதண்டனைச் சட்டம் சர்வதேசச் சட்டத்தை மீறுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த மசோதா நெஸ்செட்டில் (இஸ்ரேல் நாடாளுமன்றம்) அங்கீகரிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

“இந்தச் சட்டம், உயிர்வாழும் உரிமை உள்ளிட்ட சர்வதேசச் சட்டத்தின் கீழான இஸ்ரேலின் கடமைகளுடன் வெளிப்படையாக ஒத்துப்போகவில்லை. முறையான நடவடிக்கை மீறல்கள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது. இது ஆழ்ந்த பாகுபாட்டைக் கொண்டுள்ளது. எனவே இது உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

இஸ்ரேலின் வலதுசாரி கூட்டணி அரசால் முன்மொழியப்பட்ட இந்தப் புதிய சட்டம், மேற்குக் கரையில் “பயங்கரவாத”க் குற்றச்சாட்டில் தண்டனை பெறும் பாலஸ்தீனியர்களுக்கு மரணதண்டனையை இயல்புநிலைத் தண்டனையாக மாற்றியுள்ளது. இச்சட்டத்தின்படி, இஸ்ரேலியர்களைக் கொலை செய்து, அதன் மூலம் அரசுக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்ட பாலஸ்தீனியர்களுக்கு மரணதண்டனை கட்டாயமாகும். ஆனால், இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களைக் கொல்லும் வழக்குகளுக்கு இச்சட்டம் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சட்டத்தின் கீழ், வழக்குத் தொடரும் அதிகாரிகள் மரணதண்டனை கோராவிட்டாலும் நீதிமன்றங்கள் அதனை விதிக்க முடியும். மேலும், தண்டனை வழங்க ஏகமனதான நீதித்தீர்ப்பு அவசியமில்லை.

இஸ்ரேலின் நாடாளுமன்றம் இம்மசோதாவிற்கு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பரவலான விமர்சனங்களை ஈர்த்துள்ளது.

  • செய்தி: சின்ஹுவா