மத்திய கிழக்கு போர் அதிர்ச்சியை சமாளிக்க கூட்டு முயற்சி அவசியம் - ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
மத்திய கிழக்கு போர் அதிர்ச்சியை சமாளிக்க கூட்டு முயற்சி அவசியம்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சவால்களைத் தனித்தனியாக அல்லாமல் கூட்டு முயற்சியுடன் செயற்பட்டு வெற்றிகொள்ள முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை இளம் தொழில்முனைவோர் சபையின் 2026 வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது 2022 ஆம் ஆண்டில் இருந்த டொலர் தட்டுப்பாடு போன்றதல்ல என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது விநியோகப் பாதைகள் முடங்கியதால் ஏற்பட்டுள்ள 'வெளிப்புற அதிர்ச்சி' என்று விளக்கினார். உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மார்ச் மாத தொடக்கத்தில் 70 டொலராக இருந்த நிலையில், தற்போது 100 டொலராக (42 சதவீதம்) உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைச் சேமிக்கத் தொடங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். மார்ச் 1ஆம் திகதி 4 ஆயிரத்து 500 கிலோ லீற்றராக இருந்த டீசல் விற்பனை, மார்ச் 3ஆம் திகதி 10 ஆயிரத்து 500 கிலோ லீற்றராக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உறுதியளித்தார்.
நவீன தொழில்நுட்பங்களுடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் இலக்கு எனத் தெரிவித்த அவர், அதற்கான விரிவான திட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய அங்கமாகும் என்று கூறினார். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மையங்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 6.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் 'டிஜிட்டல் அடையாள அட்டை' கட்டாயம் வெளியிடப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்தார்.
தாம் பதவியேற்ற போது இருந்த பொருளாதார ஐயங்கள் இன்று நீங்கியுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, 2025 ஆம் ஆண்டில் இலங்கை வரலாற்றில் மிகக் குறைந்த வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார். அசைக்க முடியாத, வெளிப்புற மற்றும் உள்நாட்டு அதிர்வுகளுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய ஒரு பலமான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதாரத்தில் இளம் தொழில்முனைவோரின் பங்கு முக்கியமானது என்று பாராட்டிய ஜனாதிபதி, அவர்கள் தமது வர்த்தகத்தை அடுத்த சில ஆண்டுகளில் இரட்டிப்பாக்க வேண்டும் என்றும், அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
Editor