மல்வானை வீடு:மாணவர்களுடன் அமைதியான தீர்வே அரசின் நோக்கம் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க
மல்வானை வீடு: மாணவர்களுடன் அமைதியான தீர்வே அரசின் நோக்கம் !
அரச சொத்தாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, எவராலும் உரிமை கோரப்படாமல் இருந்த மல்வானை வீட்டை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பொறுப்பேற்றிருக்கும் விவகாரத்தை, மாணவர்களுடன் மோதலுக்குச் செல்லாமல் அமைதியான முறையில் தீர்க்கவே அரசு விரும்புகின்றது என்று தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.
மேலும் கூறியதாவது:
"மல்வானை வீட்டை அருகில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீண்டகாலமாக நிலவும் விடுதிப் பிரச்சினை மற்றும் இடப்பற்றாக்குறையை நாம் உணர்ந்துள்ளோம்.
இது தொடர்பாகக் கல்வி அமைச்சு மற்றும் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி விரைவில் சுமுகமான தீர்வு எட்டப்படும்.
இந்தச் சம்பவத்தை வைத்து அரசின் மீது சேறு பூச எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. சட்டத்துக்கு முன்னால் அனைவரும் சமமானவர்களே என ஜனாதிபதி தெளிவாகக் கூறியுள்ளார். நிலக்கரி கொள்வனவு அல்லது கொள்கலன் விடுவிப்பு தொடர்பான விசாரணைகளுக்குத் தேவைப்பட்டால், சாட்சி சொல்ல ஜனாதிபதி நேரில் செல்லவும் தயங்கமாட்டார்.
எதிர்க்கட்சியினர் வீணாகப் பொய்களைப் பரப்பாமல், புகார்கள் ஏதேனும் இருந்தால் தாராளமாக விசாரணை ஆணைக்குழுக்களிடம் முறையிடலாம். எதிர்க்கட்சிகளின் அரசியல் கோஷங்களுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அரசு செயற்படாது" என்றார்.
Editor