மத்திய கிழக்குப் போர் சூழல்: அத்தியாவசிய சேவைகள் குறித்து ஜனாதிபதி ஆய்வு
அத்தியாவசிய சேவைகள் குறித்து ஜனாதிபதி ஆய்வு
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பராமரிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க, ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதார ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய,உள்துறை செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவனத் தலைவர்களுக்கு இடையே இன்று (15) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
சுகாதாரம், கல்வி, தொழில், விவசாயம், மீன்பிடி போன்ற துறைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன், ஒவ்வொரு துறையிலும் புதுப்பிக்கப்பட்ட எரிபொருள் தேவைகள் குறித்து ஒவ்வொரு அமைச்சின் செயலாளர்களும் ஜனாதிபதிக்கு விளக்கினர்.
எழுப்பப்பட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்ட பின்னர், சுகாதாரம் போன்ற துறைகளுக்கு அத்தியாவசிய எரிபொருள் இருப்புக்களை பிராந்திய ரீதியாகப் பராமரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மேலும் ஆராயுமாறு ஜனாதிபதி கூறினார்.
மேலும், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மேலும் ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு ஜனாதிபதி செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் குறித்து முன்கூட்டியே அனுமானங்களைச் செய்ய முடியாது என்பதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் குறியீட்டு முறையை மேலும் முறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறையின் குறைபாடுகளை விரைவில் சரிசெய்து புதுப்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், எழும் புதிய சூழ்நிலைகள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பும் கவனமும் இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு துறையிலிருந்தும் தனித்தனியாக முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக, சவாலுடன் தொடர்புடைய மாற்று முறைகளை ஒட்டுமொத்தமாகக் கருத்தில் கொண்டு அவற்றை செயல்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
Editor